வியாழன், 26 பிப்ரவரி, 2009

படிப்படியாகப் படியேறு!

இருவரிக் குதிரை
ஏறியமர்ந்தால்
குருவரி நீ, மதி
குடைப்பிடிக்கும்!

நூலடி நடந்து
பார்த்தவருக்கே
காலடி கணக்கைக்
கண்ணறியும்!

அகத்தை அறிந்தால்
அண்டவெளியெனும்
புறத்தைப் புரிந்திடப்
புலன்கிடைக்கும்!

ஏலக் காயால்
இவ்வுடல் சிறக்கும்
ஏலாதி யாலுளம்
எழுந்துநிற்கும்!

திரைப்படத் துறையால்
நரைப்படும் மனமும்
முறைப்பட நன்னூல்
முகம்பார்ப்போம்!

ஒல்காப் புகழில்
உயர்ந்திட நினைத்தால்
தொல்காப் பியரின்
துணைசேர்ப்போம்!

அருந்தொகை யாக
அகவாழ்விருக்க
குறுந்தொகை கற்போம்
குலம்சிறக்கும்!

மெஞ்ஞா னத்தின்
மேன்மைவிளக்கிடும்
மென்பொருள் போன்றது
திருமந்திரம்!

விஞ்ஞா னத்தின்
வெற்றித் திறவுகோல்
வியனுல களித்த
மின்னெந்திரம்!

மும்மணி நாண்மணி
கோவை உலாவுடன்
பன்மணித் திரளாம்
சிலம்பணிக!

மூதுரை கேட்டு
நல்வழி நடந்தால்
வாதுரை செய்திடும்
வாக்குண்டாம்!

பாத்தென்றல்.முருகடியான்

சனி, 21 பிப்ரவரி, 2009

பறவைகளே!

பட்டுச் சிறகை விரிக்கின்றீர்
பவள அலகால் கொறிக்கின்றீர்
எட்டுத் திசையும் பறக்கின்றீர்
இன்னிசைத் தேனைச் சுரக்கின்றீர்

கேள்விக் குறிபோல் சிலமூக்கு
கிளருங் கால்களில் உகிரூக்கு
வாள்போல் அலகுடன் வாயாச்சி
வான்வெளி பறப்பதும் ஆராய்ச்சி

நெல்லிக் காய்போல் தலைகொண்டீர்
நீள்மரக் கிளைகளில் துயில்கொண்டீர்
பள்ளிக் குழந்தைகள் போலாகிப்
பகல்வரு முன்னே பறக்கின்றீர்

கையை விரித்துக் கால்மடக்கிக்
கண்படுந் தூரம் பறந்துவிட்டு
பையவே மண்ணில் இறங்குவதைப்
பார்த்தே படைத்தார் வானூர்தி

துமுக்கிப் பேரொலி கேட்டவுடன்
துடித்துப் பறக்கும் பறவைகளே
தமுக்கித் திரியா நற்குணங்கள்
தாங்கிய நீங்களும் உயர்திணையே!

கழுகைக் கண்டால் அஞ்சுகின்றீர்
காதலில் குஞ்சினைக் கொஞ்சுகின்றீர்
பழுதறி யாமல் வாழ்கின்றீர்
பகுத்தறி வாளரை ஆள்கின்றீர்!

பாத்தென்றல் முருகடியான்

திங்கள், 16 பிப்ரவரி, 2009

நிலவேசொல்!

மையாடைக் குள்ளுடலை
மறைத்திருக்கும் வெண்ணிலவே!
ஐயாஅச் செங்கதிரோன்
அனலணைக்கும் பொன்னிலவே!

கார்குழலை வானாக்கி...
கதிரொளியை முகமாக்கி...
ஊர்புகழ வரும்நிலவே!
உன்னிடத்தில் சிலகேள்வி!

உப்பலத்தில் பூவதைப்போல்
உயர்வானில் மீன்கூட்டம்...
அப்பளம்போல் நீபுடைக்க
அடுப்பெதுவோ? நெய்யெதுவோ?

நெருப்பிட்ட பானைநீர்
நெருப்பைப்போல் கொதித்திருக்க
வெறுப்புற்றுக் கதிர்க்கனலை
வெளிக்காட்டா வியப்பென்னே?

அல்லிப்பூ நீமலர்த்த...
முளரிப்பூ கதிர்மலர்த்த...
வெள்ளிக்காய் எம்மலரும்
விரியாத வியப்பென்னே?

பசிக்குணவே இல்லாமல்
பலகோடி பேர்மடிய
விசுக்கெனவான் கோளனுப்பும்
வீண்செலவு ஏன்நிலவே?

மண்ணம்மா பெற்றதுதான்
மானிடமும் பயிரினமும்
உண்ணுங்கள் எனக்கொடுக்க
ஒருவருக்கும் மனமிலைஏன்?

விண்ணம்மா விடமிருக்கும்
விழுப்பொருளைத் திருடுதற்(கு)
இன்னும்மா னிடம்முயலல்
ஏனம்மா? சொல்நிலவே!

நாய்களுக்கு மெத்தையிட்டு
நளபாகச் சோறுமிட்டு
மாய்கின்ற மனிதருக்கு
மணிச்சோறு தராததுமேன்?

பெண்ணுக்கு நீயுவமை!
ஆணுக்குப் பகலுவமை!
மண்ணுக்குள் பெண்ணாணின்
மதிப்பொன்றாய் சொல்லுவதுமேன்?

பாத்தென்றல்.முருகடியான்

வியாழன், 12 பிப்ரவரி, 2009

அறம்!

திருவள்ளுவர் திருவிழாவில் பாமலர் சொரிதல் நிகழ்வில் பாமலர் சொரிபவர் முருகடியான்!

அள்ளிக் கொடுக்கும் அறக்கொடையர் ஐயா ஜலீலும் சோதிமணி
நெல்லிக் கனிபோல் வாழ்நாளை நீட்டும் உணவிடும் செல்லப்பா
வெள்ளித் தமிழ்த்தேர் வருவதுபோல் விளங்கும் வேங்கடர் நவாசுடனும்
ஒள்ளொளிர் நுண்கலைக் கழகத்தார் உயர்மணி மாண்புறு மதியழகர் (அவர்கள்)

அறுவரின் அருள்மனத் தருஞ்செயலால் அலர்ந்தது வள்ளுவத் தேவர்விழா
செருவர நேரினுஞ் செய்தநன்றி செப்பிட மறுப்பவர்க் குய்விலையாம்
திருநெறி குறள்நெறித் தேர்வதனைத் திரித்திடல் தமிழறம் மறையுமென
ஒருமுறை முதலறம் நன்றிநொன்னேன் ஒழுகற வாணரின் திருமுன்னே

பாயிரம் நீக்கிய ஈரறத்தைப் பகர்ந்தார் வள்ளுவர் அறப்பாலில்
ஆயிரம் அறங்களில் இல்லறமே அகிலம் உய்வுறும் முதலென்றார்
காயுங் கனியும் உண்டலுத்துக் கசந்ததும் மேற்கொளல் துறவறமே
ஓயும் உடலுயிர் உள்ளவரை உலகியற் கேற்றதவ் வறமென்றார்

நூற்றுப் பதின்மூன் றதிகாரம் நுவலும் அறத்தை வலியுறுத்தி
ஏற்றி ஓரதி காரத்தில் இயம்பிய அறங்களைக் கற்றறிந்தால்*
காற்றைப் போல்மனம் மாற்றமுறும் கடவுள் அருளறம் தோற்றமுறும்
ஆற்றைக் கடந்திட முடியார்க்கும் அலைகடல் தாண்டவும் கலந்தோன்றும்

செல்லரிக் கின்ற மரம்போலும் செந்தமி ழழிக்கும் பிறமொழிகள்
கொல்லரி வாளை முத்தமிடும் குணமிருக் கின்ற அறிவிலிகள்
நெல்லரிக் கட்டுகள் சுமப்பதுபோல் நிமிர்பதர் சுமப்பதில் அறமில்லை
வெல்லரி மாவினம் வீழ்ந்தழிய வீண்முழக் கிடுவதும் அறமில்லை

கூடித் தின்றதும் பறந்துவிடும் குருவிக் கூட்டென வாழுவதும்
வாடித் தவிக்கும் தமிழ்ப்பயிர்க்கு வாய்க்கால் வழிகளை மூடுவதும்
பேடிக் கைவாள் போலிருக்கும் பேரிலக் கியப்புகழ் பாடுவதும்
நீடிக் கும்நிலை மாறாமல் நிழல்தான் தமிழறம் நிலையில்லை

ஈதல் இசைபட வாழ்தலறம் எதிலும் நடுநிலை தேர்தலறம்
சாதல்; வருமெனத் தெரிந்தாலும் சான்றோர் சொல்செயல் சார்தலறம்
காதல் பிறவுயிர் காத்தலறம் கள்ளம் பொய்புலால் நீத்தலறம்
ஆதன் வீடுற வேண்டுமெனில் அன்பின் வழியுயிர் சேர்த்தலறம்

வேரை அழுகிட விட்டுவிட்டு விரிகிளை இலைகளில் நீர்தெளித்தே
ஊரை ஏய்க்கிற நம்செய்லால் உலகில் குறளறம் உயர்வதுண்டா?
காரைக் களைகளை நீக்காமல் கழனியிற் பயிரிடும் உழவருண்டா?
தேரைக்(கு) ஆண்டவன் உணவளிப்பான் தேன்தமிழ்ச் சொல்லறம் யார்வளர்ப்பார்?

இனியவை கூறி விருந்தோம்பி இன்னா செய்வதை விடுதலறம்
முனிவதை அடக்கித் தவமியற்றி முழஒப் புணர்வதைத் தொடுதலறம்
அணியணி யாய்த்தமிழ்ச் சொல்லழிவை அகிலத் தமிழினம் தடுத்தலறம்
மணிமணித் தமிழ்ப்பெயர் மறையாமல் தக்களுக் கிடுவதே மானமறம்

பாலுந் தேனும் பழச்சாறும் பருகிக் கொழுத்த பாம்புகளை
நாளும் வளர்க்கும் தமிழினமே நரியறி வடிமை ஆனிரோ?
காலுந் தலையுந் தெரியாமல் கால்நடை மேய்த்து வந்தவரைத்
தோளில் சுமப்பதை விடமறுத்தால் தொல்லறம் தமிழறம் வாழ்ந்திடுமா?

வரிசைப் பிடித்தன கொண்டாட்டம் வளர்தமிழ் நிலைதான் திண்டாட்டம்
அரிசியை நீக்கிய உமிநாட்டம் ஆகா தெனப்பகை பழிநாட்டம்
பரிசைப் புகழ்பெற வம்பாட்டம் பகுத்தறி வோமுயற் கொம்பாட்டம்
இரிசை நீக்கிட எழமாட்டோம் இன்தமிழ் அழிவதற்(கு) அழமாட்டோம்!

ஈன்றாள் பசித்துயர் கண்டாலும் இழிச்செய லாலதை நீக்காதே
தோன்றாத் துறைகளை முடித்தாலும் துளியுஞ் செருக்குளஞ் சேர்க்காதே
நான்தமி ழினமென நடிப்பாரை நம்பியுன் ஆற்றலை இழக்காதே
வான்றமிழ் வள்ளுவர் வழங்கறங்கள் வாழ்வது வண்டமிழ் வழக்காறே!


* -அறன்வலியுறுத்தல்

பாத்தென்றல்.முருகடியான்!

புதன், 11 பிப்ரவரி, 2009

நீடுவாழ நெறிவேண்டும்!

நாலும் நடந்து முடிந்த பின்னே
ஞானம் தலைக்கு வந்ததே! -அந்த
ஞானத் தாயின் கண்ணை மூட
நரையுந் திரையும் முந்துதே!

முறுக்கு கொண்ட கையும் காலும்
செருக்கைத் தூக்கி நடந்தன... -குருதிப்
பெருக்கை இழந்த உடலைத் தாங்குந்
தடியில் லாமல் கிடந்தன...

கல்லைத் தின்றுச் செரிக்கும் வயதில்
குயவன் நினைவுத் தோன்றிடா! -முத்துப்
பல்லை இழக்கும் வரையில் அந்தப்
பகலன் அருளை வேண்டடா!

அணையைக் கட்டித் தடுத்தி டாமல்
ஆற்று வெள்ளம் பாய்ந்தது! -முற்றிக்
கனியும் முன்னம் வெம்பிச் சுருங்கிக்
காலன் காலில் சாய்ந்தது!

போட்டி போட்டுப் புலனை ஆட்டுப்
பொறியி லிட்டுச் சுற்றினோம்! -மதி
பூட்டுப் போடும் திறனில் லாமல்
பொய்யைத் தானே பற்றினோம்!

நகைய ணிந்த காதும் மூக்கும்
பகைக ளாகிப் போயின... -நேற்று
வகைவ கையாய்க் காட்சி கண்ட
விழிகள் இருள லாயின...

குன்று தூக்க நின்ற தோள்கள்
செண்டு தூக்க அஞ்சின... -இன்றும்
பண்டி ருந்த பசுமை தேடி
உறுப்ப னைத்தும் கெஞ்சின!

கோடு தாண்டிப் போன தாலே
இராம காதை வந்தது! -மாந்தர்
நீடு வாழப் பாடஞ் சொல்லச்
சுழலு முலகப் பந்திது!

பாத்தென்றல்.முருகடியான்

வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

நடுவு நிலைமை!

ஆங்கிலம் பேசு சிங்கிலம் வேண்டாம்
அரசே சொல்கிறது! -நம்மைத்
தாங்கிய தமிழைத் தணலி லெறிந்துத்
தமிங்கிலம் வெல்கிறது!

கடமை என்றாலும் தந்தையும் மகனும்
காட்டுக நன்றியென்றார்! -அந்த
உடைமையைத் தூக்கி உதறுதல் தமிழ்த்தாய்க்(கு)
உதவுதல் ஆகிடுமா?

மொழிகளைப் பிரித்து முரண்பகை வளர்த்து
மோதுவ தெதனாலே? –உண்மை
வழியறி யார்ப்பிறர் வாய்மொழிக் கலப்பதன்
வழிசெலல் அதனாலே!

செந்தமிழ் எழுதிப் பேசு என்போரிடம்
சினம்பகை உறுவதுமேன்? –என்றோ
வந்தவர்ப் பழிவழி வாழ்ந்து வதங்கிய
வழக்கத்தின் நிலையாலே!

தாடியை மம்மியை நீக்கெனச் சொல்வது
தாடியின் மேல்பகையா? –உன்தாய்
வாடிடு வாளென வழக்குரைத் தாலவர்
வன்பகை யாளர்களா?

உன்னுரி மைக்கெட ஒருப்படு வாயா?
உன்குடி உயர்ந்திடுமா? –தாயவள்
தன்னுரி மைக்கெடத் தன்மகன் நினைப்பது
தமிழுக்குச் சிறப்பிடுமா?

கழிவைக் கொட்டிடும் குப்பைத் தொட்டியாய்க்
கனித்தமி ழாகுவதோ? –அந்த
இழிவைச் செய்திட வேண்டா மென்பவர்
எரிதழல் வீழுவதா?

மொழியறி யாதவர் எழுதுக என்றிங்(கு)
யாரடித்தார் கொல்லோ? –எந்தப்
பழியையும் நீக்குதல் பகுத்தறி வென்பதைப்
படித்தறி யாக்கல்லோ?

கெடுப்பவர் கெடுப்பவை யாரெவை என்பதைக்
கேட்டுண ராவரையில் -நம்மை
அடுத்தவர் பகையுற(வு) என்பதை அறிந்திடும்
அறிவுக்(கு) இரும்புத்திரை!

குளத்தைப் பகைத்தவன் கால்கழு வாமலே
கோவிலுள் போவதனால் -அந்தக்
குளத்துக்குக் கேடெனும் கோள்விடு! நடுநிலைக்
குணமடை வாயதனால்!

பாத்தென்றல்.முருகடியான்.