சனி, 31 ஜனவரி, 2009

முப்பாலில் கடைந்த நெய்!

ஓரேழு அசைகள் கொண்டே
உருவான பொதுநூற் கண்டை
ஈரேயும் இரண்டு பேறும்
இனியகுறள் வாழ்வால் சேரும்!
ஓரேயுப் பிறவிக் குள்ளே
ஒண்டாது துயரச் சொல்லே!
பாரேயும் படித்தற் கென்றே
பயந்தாளே தமிழ்த்தாய் அன்று!

முப்பாலில் கடைந்த நெய்நூல்
மூதண்ட மளந்த மெய்நூல்
ஒப்பாதல் இதற்கொண் றில்லை
உலகுக்கோர் அறப்பூங் கொல்லை!
உப்பாலை கடல்சூழ் வையம்
ஓதத்தேன் குறளால் உய்யும்!
எப்பாழும் இதனால் நையும்
எழுதியதெம் தேவன் ஐயன்!

பசும்புல்லும் உயிர்கள் யாவும்
படைக்கின்ற மூலம் தன்னை
விசும்பின்நீர், அமுதம் என்றே
விளம்பியவன் குறளா சானே!
குசும்புள்ள இன்பப் பாலைக்
குடித்தாடிப் பொருட்பால் தேட
அசும்பில்லா அறக்கோல் இந்த
அகிலத்தில் குறள்போல் ஏது?

பத்துப்பா தலைப்பிற் கென்று
பழச்சாறு பிழிந்த தைப்போல்
எத்திக்கும் மாந்தர் நெஞ்சம்
ஏற்கின்ற பொதுமைச் செங்கோல்
வைத்துள்ள வள்ளு வம்தான்
வானோர்க்கும் பிடித்த நன்னூல்!
தித்திக்கும் தேன்பா லாக
தேவர்சொற் குறளே மெய்நூல்!

தங்கப்பூர் தமிழ்த்தாய் வாழும்
தாமரைப்பூ, தக்கார் ஆளும்
சிங்கப்பூர் ‘அதிபர் நாதன்’
சிலைதிறக் கின்ற இந்நாள்
இங்குற்ற தமிழர்க் கெல்லாம்
எழுச்சிநாள் இனியப் பொன்னாள்!
பொங்கட்டும் குறள்போல் ஆட்சி
பொழியட்டும் ஐயன் போற்றி!

பாத்தென்றல்.முருகடியான்

திங்கள், 26 ஜனவரி, 2009

மாலை மயக்கம்!

நேற்றெறிந்த மாலையொன்று
தெருவில் கிடந்தது! -வீடு
மாற்றிக்கொண்டு கதிரும்மாலை
மலைமறைந்தது!

சூடுபட்ட மாலைக்காய்ந்து
சுருங்கிவிட்டது! -அந்த
ஏடுதொட்டுக் காற்றசைக்க
மாலைநெளிந்தது!

விளக்கிலாஅத் தெருவிலொருவன்
நடந்துவருகிறான்! -பாம்பு
விழுந்தசைந்து கிடப்பதாக
எண்ணிமருள்கிறான்!

தாண்டிப்போகத் துணிவுமின்றித்
தவித்துநிற்கிறான்! -அச்சம்
தீண்டித்தீண்டி உயிருமுடலும்
துடித்துநிற்கிறான்!

அந்தநேரம் வந்தஒருவன்
கையில்விளக்கொளி! -பட்டு
அரவம்மாறி மாலையாகி
தந்ததறிவொளி!

ஞானமென்ற வெளிச்;சமின்றி
நடக்கும் போதெல்லாம் -உண்மை
நாமறிந்து கொள்வதில்லை
வாழும்நாளெல்லாம்!

நீரைமூடிக் கொண்டிருக்கும்
மண்ணைப்போன்றது! -நமது
நிழலைப்போலுந் தொடருகின்ற
இருளின்இனமது!

பாத்தென்றல்.முருகடியான்

புதன், 21 ஜனவரி, 2009

மரங்களும் மாந்தரும்!

ஓரறி வுயிரும் ஆறறி வுயிரும்
ஒன்றெனப் பேசும் ஏழறிவர்
தேரறி வின்றித் திரைதரும் புகழால்
தேவன் திருக்குறள் தீதென்பார்!

மரம்தரும் பயனிலும் மாந்தன் தருவான்
மாந்தன் தருவதை மரம்தருமா?
நிரந்தர நிலைப்பு நிலத்துடன் பிணைப்பு
நிழல்பழம் தருவது மரத்தியல்பு!

கொல்வினை செய்யும் கொடுங்குணம் மாறி
நல்வினை செய்வார் மாந்தரினம்!
முள்ளுடல் மரங்கள் முட்களை நீக்கி
முறையுடல் பெறுமா மரங்களினம்?

ஆல மரம்போல் விழுதுகள் விடஓர்
அரச மரத்தால் முடியாது
காலங் காலமாய்க் கசந்திடும் வெம்பதன்
கனிச்சுவை மாற்றிடும் அறிவேது?

கதவும் கட்டிலும் காய்ந்தால் தரும்மரம்
உதவும் மாந்தரின் உணர்வுறுமா?
பதறும் பசிவரப் பரிந்தொரு பழந்தரப்
பணிதல் குணமந்த மரம்பெறுமா?

தங்கால் நிழலில் தங்கிய மாந்தரின்
தலைவிழுங் காயைத் தடுத்திடுமா?
வெங்கனல் தாங்கும் கிளையுடன் இலைகள்
விரிகுடை போல்நிழல் கொடுத்திடுமா?

தறித்தால் பறித்தால் தரும்பய னன்றித்
தானே கொடுத்திடும் மரமுளதா?
கொறித்தால் எரித்தால் கொதித்தெழு மியல்பு
கொடுத்தால் பெறத்தகுந் திறமுளதா?

பாட்டியின் பசியை ஓட்டிட உலுக்க
பழநி முருகனே வரவேண்டும்
ஈட்டிய நெல்லி இன்கனி யீந்தான்
என்பதில் அறிவைப் பெறவேண்டும்!

ஊக்க மிழந்த மாந்தருக் குவமை
மாக்களைப் போன்ற மரமாகும்
பூக்களைக் கொய்தால் குருதி வராது
பூந்தமிழ்க் குறள்சொல் அறனாகும்!

வீரிய மெடுத்து விதையுண் டாக்கும்
கூரிய அறிவு மாந்தருக்கு
நேரிய தன்றி நிறஞ்சுவை மாற்றும்
நெறிமன மில்லை மரங்களுக்கு!

நயன்மர மென்றும் பயன்மர மென்றும்
நவின்றவன் ஐயன் நாமறிவோம்
அயனவன் படைப்பை அழுக்காக் கிடவா
அருங்குறள் படைப்பான் வாலறிவன்

பகுத்தறி வில்லாப் பயிர்களும் விலங்கும்
பயன்பட வந்தன மாந்தருக்கு
நகுத்துரைப் பாவால் நக்க லடிப்பார்
நாக்கிலும் வாக்கிலும் நரகழுக்கு!

அரம்போல் கூரறி வுடையா ராயினும்
மரம்போ லாகிறார் பண்பிழந்து
புறம்போய்ப் பழித்துரை புகல்வார் இகழ்வார்
பொய்நகை புரிவார் அன்பிழந்து!

அஃறினைப் பொருளை உயர்தினைக் குவமை
ஆக்குதல் வழக்கு மரபாகும்
எஃகதன் கூர்மை பொருள்தரு மென்றே
இசைப்பதும் ஐயன் குறளாகும்!

கொடியிடை எனநாம் குறிப்பதற் காகத்
தடியெடுத் தோரைப் பார்த்தோமா?
வடிவுடை முகத்தை வான்நில வென்றால்
வம்பிழுத் தெவரும் ஆர்த்தோமா?

பாத்தென்றல்.முருகடியான்

வெள்ளி, 16 ஜனவரி, 2009

மண்ணேகேள்!

ஆழி யாற்றைக் கட்டிக் கொண்ட
அழகு மண்ணம்மா! -உன்
அடிவ யிற்றில் நெருப்புக் குண்டம்
இருப்ப தென்னம்மா?
வாழி போற்றி நாங்கள் பாட
மகிழும் மண்ணம்மா! -கொடு
வாய்தி றந்து நெருப்பு வாந்தி
எடுப்ப தென்னம்மா?

சின்ன கொண்டை பெரிய கொண்டை
மலைக ளானதோ? -நீ
சீறும் போது வேர றுக்கும்
அலைக ளானதோ?
வண்ணங் கொண்ட குன்ற னைத்தும்
மார்ப கங்களோ? -அதில்
வழிந்து சிந்தும் அருவி எல்லாம்
பாற்சு ரங்களோ?

மாழை நூறு மடிசு மந்து
மலர்கள் பூக்கிறாய்! -அதை
மனிதன் தோண்டி எடுக்கும் போது
பொறுமை காக்கிறாய்!
ஏழை நாங்கள் தூங்கும் போது
எட்டி உதைக்கிறாய்! -உன்
இனிய மக்கள் உயிரை உடலை
ஏனோ புதைக்கிறாய்?

மேனி எங்கும் மயிர்க ளாக
பயிர்க ளானதோ? -அதை
மேய்ந்தி ருக்க வாழ்ந்தி ருக்க
உயிர்க ளானதோ?
தானி யங்கும் தன்மை அந்தத்
தலைவன் தந்ததோ? -எங்கள்
தமிழும் அந்த முறையில் தோன்றி
நிலைத்து நின்றதோ?

உனக்குக் கூட நொடித்துப் போகும்
கால முள்ளதோ? -உன்
உறவை நம்பும் மனிதப் பயிரை
அழித்தல் நல்லதோ?
கணக்கில் லாமல் உயிரைத் தாங்கும்
காதல் கண்ணம்மா! -எம்
கால்மி திக்கப் பொறுத்த ருள்க!
நன்றி மண்ணம்மா!

பாத்தென்றல்.முருகடியான்

சனி, 10 ஜனவரி, 2009

குயில் அண்ணன்!

வேரை மறந்த
விழுதுக லாகி
வீணே கழிக்கின்றார் நாளை! -சில
விளைச்சல் சுண்ணாம்புச் சூளை! -தமிழ்த்
தேரை இழுத்திடுந்
தாம்புக ளானால்
தமிழ்,மலர்ப் பூத்திடுஞ் சோலை! -அதில்
தங்குந் தமிழ்க்கதிர் காலை!

வண்ணம் படித்திட
எண்ணம்வந் தால்கவி
அன்னம் நடந்திடும் பாட்டில்! -குயில்
அண்ணன் பிறப்பானின் நாட்டில்! -புதுத்
தென்னங் குரும்புகள்
முற்றிக் கனிந்திடத்
தேவன் திருக்குறள் ஏட்டில்! -கற்றுத்
தேர்ந்திருப் போம்கவிக் கூட்டில்!

என்னை நன்றாய்
இறைவன் செய்தனன்
தன்னைத் தமிழ்செயு மாறாம்! -அந்தத்
தத்துவ மேதமிழ் வேராம்! -தமிழ்
அன்னை நிலைப்பதும்
அழியா திருப்பதும்
அவளுக்கு நம்கை மாறாம்! -இதை
அறிந்தால் தமிழ்பெறும் பேறாம்!

பாத்தென்றல்.முருகடியான்!

செவ்வாய், 6 ஜனவரி, 2009

குழப்பம்!

எங்கே மாந்தன்
துயருற் றாலும்
என்மனம் துடிப்பதுமேன்?
அங்கே அவரவர்
உறவென மாறி
விழிநீர் வடிப்பதுமேன்?

குண்டுகள் வெடித்துத்
துண்டுகள் ஆகிக்
குலையும் மாந்தரினம்...
ஒன்றுமே செய்திட
முடியா தின்னுயிர்
உடலேன்? அவமானம்!

வாடிய பயிரால்
வாடிய மனதில்
வன்மம் உறைவதுமேன்?
தேடிய உறவும்
திருவும் திறனும்
தேய்ந்தே மறைவதுமேன்?

விடுதலைக் காக
உயிர்விடத் துடிக்கும்
விறலார் ஒருபுறமும்
கெடுதலைச் செய்தே
புகழ்பெற நினைக்கும்
கீழோர் மறுபுறமும்...

மாந்தர்க ளாக
ஈந்தவர் யாரோ?
மலர்மே லுற்றவனோ?
நீந்திய இலைமேல்
நின்று வளர்ந்து
நெடுமா லானவனோ?

அரக்கரின் கொட்டம்
அழித்திடும் கண்கொண்(டு)
அரனார் வரவென்றோ?
சுரக்கிற முலைப்பால்
எதியோப் பாவில்
சூலியுந் தரலன்றோ?

அறிவதன் வளர்ச்சி
அணுவென வெடிச்சி
அழிவே வரலாறு!
பொறிபல நூறு
பூத்தநற் பேறு
புன்மையே பெருங்கூறு!

மறக்கப் படமனம்
வைத்தவன் ஏனோ
மடிக்கும் மதிகொடுத்தான்?
இறக்கும் உடல்!உயிர்
எடுக்கும் மறுவுடல்
என்றேன் விதிபடைத்தான்?

பாத்தென்றல் முருகடியான்!

வியாழன், 1 ஜனவரி, 2009

கேள்போல் பகை!

ஒன்றுபட மாட்டார்; உருப்படவும் மாட்டாமல்
நண்டுகதை போன்றே நடந்திடுவார்! -மண்டுகளாய்
வெண்டா மரைத்தேனை வேட்காமல் வேற்றுமொழித்
தண்டுகளைத் தண்மலரென் பார்!

மூவேந்தர் ஆட்சி முடிந்து முளைத்தவிதை
சாவேந்திப் போய்வரையில் சாவாதோ? -தாவடிமைப்
பிட்டேந்தி உண்ணப் பெரிதும் விரும்பியெங்கும்
தட்டேந்து வார்தமிழ ரே!

தட்டிக் கொடுத்துவிட்டுக் கால்தொட்டுக் கைதொழு(து)
எட்டி உதைத்தால் இளித்துவிட்டு -மட்டிகளாய்
இன்னும் இறைதமிழை ஏற்றமுடி யாதிருக்கும்
மண்ணே மறத்தமிழர் மண்!

சூரியனின் சூடாய்ச் சுடுந்தொலைக் காட்சிவழி
ஆரியத்தோ டாங்கிலத்தின் ஆளுகையால் -வீரியமே
இல்லாத் தமிழ்பரப்பி ஏய்க்குந் தலைவ(ர்)களை
நல்லாராய் நம்புவதேன் நாம்?

ஆதித்தர், அண்ணா, அருந்தலைவர் மா.பொ.சி
சாதிக்க மாட்டாமல் சாவடைந்தார் -பாதிக்கப்
பட்டதெல்லாம் நீக்குவதாய்ப் பாலொழுக்கம் பேசிவிட்டு
வெட்டுகிறார் வெல்தமிழின் வேர்!

பிள்ளை மகுடமிட் பேரரெல்லாம் கொள்ளையிட்
நல்ல தமிழழிக்கும் நாடகத்தால் -கள்ளமுடன்
சேற்றில் அமுதமிட்டுச் செம்மொழியென் றார்ப்பரித்தல்
காற்றைக் கயிறாக்கல் காண்!

பாத்தென்றல்.முருகடியான்