செவ்வாய், 31 மார்ச், 2009

துமுக்கி தூக்குவோம்!

வட்டாரக் கூட்டம்; சாதி
வட்டார நாட்டம்; தமிழன்
ஒட்டாமலே பிரிந்துப் பிழைக்கும்
ஒட்டார வேட்டம்!

சென்னைத் தமிழனாம்; மதுரை
அன்னைத் தமிழனாம்; தஞ்சை
மன்னைத் தமிழனென்று பேசும்
மானத் தமிழனாம்!

தென்னவன் முதலா? பகைமைத்
திராவிடன் முதலா? இன்றும்
உண்ணி உறிஞ்சும் வடவர்
உலகத்திம் முதலா?

இல்லை என்பவன்; மறைவில்
இருக்கு தென்பவன்; அறிவும்
உள்ளதென்று பதவிதேடும்
உணர்வில் வல்லவன்!

மானம் உள்ளவன்; தமிழை
மலர வைப்பவன்; புகழை
ஈனவழியில் ஈட்டுமெவனும்
இழிந்த பிறப்பவன்!

மதத்தின் பெயரிலே; தமிழின்
மானம் அழிப்பவன்; வேற்றுப்
பதத்தை நம்பிப் பயணம்போகும்
பார்வைக் குறைந்தவன்!

கஜினி ஆளலாம்; நடிகன்
ரஜினி ஆளலாம்; நாளை
அசினும் ஆளமுல்லைப் பெரியாறு
ஆறும் போகலாம்!

தமிழைக் காப்பதாய்; சொல்லித்
தம்மைக் காக்கிறார்; நம்மை
உமியை உண்ணச் சொல்லிஅரியை
உறவுக் களிக்கிறார்!

குமரிக் கடலிலே; நம்மைக்
கொன்று குவிக்கிறான்; அவனைத்
தமரனென்று தில்லிக்காரன்
தயங்கி நிற்கிறான்!

துமுக்கி தூக்கணும்; இனியும்
தூதைத் தவிர்க்கணும்; வீணில்
கமுக்கம் பேசும்கட்சி கழகம்
கரிசை நீக்கணும்!

தமிழன் என்பவன்; செருப்பைத்
தலையில் தாங்குவான்; என்று
உமிழும் வாயில் எரியுந்தீயை
ஓங்கிச் செருகணும்!

பாத்தென்றல்.முருகடியான்

வியாழன், 26 மார்ச், 2009

தேசிய திருவிழா!

மான்பிடித் தேயிரை யாக்கிட ஓடிய
மாவரி மாநிலத்தை... -கடல்
மீன்பிடிப் பார்சிலர் மேவிய குடில்களும்
மின்மினிக் காநிலத்தை...

தேன்குடித் தாடிடத் தேன்மலர் சூடிடத்
திருத்திய தாருழைப்பு? –ஒளி
வான்கதிர் நிலவுடன் வையம்பு கழ்ந்திட
வைத்தது நம்பிழைப்பு!

காட்டுடன் மேட்டையும் கல்லுடன் முள்ளையும்
கடந்தன நம்கால்கள் -எழில்
வீட்டையும் பாட்டையும் வியர்வையி லெழுதி
விளைந்தன நம்தோள்கள்!

பசிக்கடி உள்ளுற கொசுக்கடி வெளியுற
பட்டது யாருடம்பு? -உயிர்
பொசுக்கிடு வாரிடம் பூவென நசுங்கிய
தமிழரென விளம்பு!

காற்பந் துதைப்பதைப் போலுதைத் தாரந்தக்
காலத்தை எண்ணுகிறேன்! -இன்று
நாற்பத் திரண்டக வைப்புத் தமுதத்தை
நானள்ளி உண்ணுகிறேன்!

வையகம் கையக மாக்கிவிட் டோமிந்த
வாழ்;வை உயர்த்திவிட்டோம்! -பெரும்
பொய்யகத் தாரையும் தூக்கிவிட் டோம்வளம்
பூத்திட ஆணையிட்டோம்!

கண்ணீர்த்; துளிகளை வைரங்க ளாக்கிடக்
கையிரு நான்குபெற்றோம்! -நம்மேல்
வெந்நீரை யூற்றிய வீணர் விழிபெற
வீரப் படையும்பெற்றோம்!

வானிலோர் தண்ணிலா வையத்தி லின்;நிலா
தானவள் சிங்கையம்மா! -மக்கள்
ஊனிலு முயிரிலும் மொன்றிக் கிடந்திடும்
உண்மையே சிங்கையம்மா!

எப்படி வந்ததிப் படியொரு வளமெனத்
தப்படிப் பார்நினைக்க... -உழைப்
பைப்படி யாகவே எண்ணி நடந்தவர்
உயர்வென உலகுரைக்க...

முப்படி ஒருபடி சமய வெறிப்படி
முனைமழுங் கும்படியாம்! -இனத்
தப்படி வேற்றுமை சட்டம் சமத்துவ
சார்ந்த முறைப்படியாம்!

தூசித் துகள்களைத் தட்டித் துலக்கிய
தூய திருநிலத்தை -எழில்
வீசுங் கொடியசைந் தாடுந் திருவிழா
தேசிய நாள்விழாவே!

பாத்தென்றல்.முருகடியான்

சனி, 21 மார்ச், 2009

தித்திக்கும் தேசியநாள்!

உலகப் படத்தில் ஒளிரும் புள்ளி!
உறுபசிப் பிணியை எரிக்கும் கொள்ளி!
புலமைப் புதுமைப் புலர்விடி வெள்ளி!
புகழ்பெற நலங்கள் தருவாள் அள்ளி!
சலனமில் லாநற் சமத்துவப் பள்ளி!
சட்டம் ஒழுங்கால் வலிவருள் நெல்லி!
வளந்தருஞ் சாங்கி துறைமுகச் செல்வி!
வணங்கிடு வோமவள் திருப்புகழ் சொல்லி!

கண்ணீர் வடித்தவள் அன்றொரு நாளால்
கட்டறுத் தெழுந்தவள் விடுதலை வாளால்
பன்னீர் தெளித்தவள் நன்னெறிக் கோளால்
பழிகளைத் துடைத்தவள் நான்கிரு தோளால்
புண்ணீர் அகற்றினாள் மதிஎனும் வேலால்
புதுநெறி அறிநெறி வகுத்தசெங் கோலாள்
திண்ணியக் கோணலை நிமிர்த்தினள் நூலால்
தென்கிழக் காசியத் தின்றிவள் மேலாள்!

ஆறுகள் ஏருழ அணிவயல் இல்லை
ஆயினும் இவளுடல் அருள்மணக் கொல்லை
வீறுகொள் கடலலை நாற்புற எல்லை
விலங்கியல் புள்ளியல் இன்பமோ கொள்ளை
சேறுகொள் நிலமிசை மனைவரும் ஒல்லை
சிறந்திடக் கண்டனர்ப் பனிமலைப் பிள்ளை
பேறுகொள் அவள்திருப் பெயரெனுஞ் சொல்லைப்
பேசினால் உள்ளொளி பிறக்குமா தொல்லை?

இன்றிவள் வயதொரு நாற்பதின் மூன்று
எழுந்தெடு நற்றுறை புகழ்ந்திடத் தோன்று
குன்றிவள் விளக்கெனக் குறள்வழி ஊன்று
குடிநலங் காப்பதில் இவள்பெருஞ் சான்று
நன்றுற நான்கின மதநிறந் தாண்டு
நாமெனும் நலம்வர இறைவனை வேண்டு
வென்றிட விடிவுற அறிவொளி தூண்டு
வெற்றியே விளைந்திட விளக்கிடும் ஆண்டு!

பாத்தென்றல் முருகடியான்.

திங்கள், 16 மார்ச், 2009

தமிழ்முழங்கக் கேட்போம்!

செம்மொழியாய் இருப்பதற்குத்
தகுதிபதி னொன்றாம்!
அம்மொழியும் தனித்தியங்கும்
ஆற்றலதில் ஒன்றாம்!
நம்மொழிக்கும் அத்தகுதி
நன்கமைந்த துண்டாம்!
இம்மொழிக்குள் இரவல்மொழி
கலப்பதுகற் கண்டா?

எளியதமிழ் என்பதென்ன?
இரவல்மொழிக் கலப்பா?
வலியதமிழ் ஏதுமில்லை
வழக்கமாகும் உழைப்பால்!
கிளிகளிங்கு பேசுமன்றோ
சொல்லுகின்ற சொல்லை!
தெளியவேண்டும் தமிழுலகம்
மலரழிக்கும் முள்ளை!

வானுயர்ந்த தோற்றமந்த
வாமனைப்போல் குறையும்...
தேனளிக்கும் மலர்க்காவும்
தீப்பொறியால் எரியும்...
ஊனமுற விட்டிடாமல்
ஒண்டமிழைக் காப்போம்!
ஆனவரை நம்குழந்தை
தமிழ்முழங்கக் கேட்போம்!

பாத்தென்றல்.முருகடியான்

புதன், 11 மார்ச், 2009

தமிழ்!

மல்லிகைப் புன்னகை
மந்திரக் கண்ணகை
மயக்கும் நம்மனத்தை! -தமிழ்
சொல்லிய சொல்வகை
மாணிக்கக் கல்வகை
சுட்டிடுந் தீக்குணத்தை! -தமிழ்
வீசிய வெண்பரல்கள்! -புவி
வெல்லுந் திருக்குறள்கள்! -தமிழ்
பேசிய பேச்சொலிகள்! -முகம்
வீசிடும் மூச்சொலிகள்! -தமிழ்
தேனோ? பாலோ?
தேவதை தானோ? (மல்லிகை)

வேரடி, மொழி
விருந்தடி என
வெய்ய னீன்ற மகளோ? -இந்தப்
பாரடி எங்கும்
பரவடி எனப்
பரமன் சொல்லின் துகளோ?
காலக் கணக்கில்
அகப்படாத வயதோ? -இந்த
ஞாலத் தோளை
நனைக்கவந்த புயலோ? -இவள்
பெற்றவை ஆயிரம்
மொழிக் குழந்தை
கற்றவர் சொல்லிய மருந்தை
நற்றவம் செய்திதை
நாமடைந்தோம்
நாளும் அமுதமே அருந்த -தமிழ்
தேனோ? பாலோ?
தேவதை தானோ? (மல்லிகை)

பாத்தென்றல்.முருகடியான்

வெள்ளி, 6 மார்ச், 2009

மலைமணிச் சோதியன்!

மலையாய் வளர்ந்தும்
உளியால் உடைந்தும்
சிலையாய்ப் பிறந்த
சிவனுருவே!

முடியாய் உயர்ந்தும்
முதிலாய் எழுந்தும்
படியாய்க் கிடக்கும்
பரம்பொருளே!

மண்ணால் மறைந்தும்
மணி,பொன் கரந்தும்
தண்ணார் முகிலுடை
தரிப்பவளே!

அண்ணா மலையென
அக்கினி உலையென
பொன்னார் மேனியின்
புறவுருவே!

பைந்தமிழ்ப் பாவலர்
மீசைகள் மூலிகை
பனியுடல் முடியெனச்
சுமப்பவனே!

பாறைக ளாயிரம்
கீரைக ளாயிரம்
பாவயருக் குதவிடும்
பரமனமே!

தலைகளில் அருவியும்
தரங்கிசைச் சுருதியும்
வயல்களில் மணியுமாய்
வளர்பவனே!

பாத்தென்றல்.முருகடியான்

திங்கள், 2 மார்ச், 2009

குறளை பேசாதீர்!

கேட்டு வாங்கியும் போட்டு வாங்கியும்
கீழைமை பேசுதல் முறைதானா?
காட்டு மன்பினில் கயைப் பூசுதல்
கண்ணிய முடையார் செயல்தானா?

நட்ட நட்பினில் நஞ்சைக் கலப்பதா?
நல்லதைச் செய்திட முடியாதா?
உட்பகை யோடும் உறவு பேசுதல்
உயர்ந்தவர் நெஞ்சம் கடியாதா?

குட்டிச் சொல்வதும் தட்டிக் கேட்பதும்
நட்டவர்க் குரிய நயமாகும்
ஒட்டிப் பேசியே உறவைச் சாய்ப்பதால்
உமக்கும் எமக்குமெப் பயனாகும்?

முட்டியைத் தூக்கும் முனைப்புறு பேச்சால்
முகமும் அகமும் கெடுகிறதே
வெட்டுதல் எளிதே விளைவிப்ப தரிதே
வெண்மலர் நெஞ்சும் சுடுகிறதே

வஞ்சகச் சிரிப்பும் வாய்மொழிச் செழிப்பும்
அஞ்சனம் பூசுதல் அறியாமல்
தஞ்சமென் றிருக்கும் தண்மலர் மனத்தைத்
தடியா லடித்தபதுந் தகுமாமோ?

பொருளால் செய்யும் உதவியை மட்டும்
புகழ்ந்தே திரிவது புல்லறிவு
அருளால் மனமொழி அன்பால் உதவுதல்
ஆண்டவன் கொடுத்த நல்லறிவு!

நன்றியின் வித்து நல்வினை ஒழுகல்
நம்குற ளாசான் சொல்லாகும்
குன்றியின் முகம்போல் குறுகுளத் தார்க்குக்
கொடுத்தநன் மலரும் முள்ளாகும்

தானே வளர்த்த மேழத்தை அறுத்துத்
தானே உண்பதன் அருளாட்சி
வானே வருமென வாழ்பவர் செயலால்
வறியோர்ப் பயணமே இருளாச்சி!


கொண்டது விடாத குணங்குறி தொடாத
மண்டுகள் வாய்மொழி மந்திரமா?
கண்டுடன் கன்னலும் கடித்தால் சுவைதரும்
கருத்தறி யாருளம் எந்திரமா?

கூவி அழைத்ததும் குக்கலைப் போல்வரும்
ஆவியை வெகுள்வது அறியாமை
நீவிய விரல்களே நீள்விழி பாய்வது
நெருநல் கேளறம் புரியாமை!

பாத்தென்றல்.முருகடியான்