வியாழன், 12 பிப்ரவரி, 2009

அறம்!

திருவள்ளுவர் திருவிழாவில் பாமலர் சொரிதல் நிகழ்வில் பாமலர் சொரிபவர் முருகடியான்!

அள்ளிக் கொடுக்கும் அறக்கொடையர் ஐயா ஜலீலும் சோதிமணி
நெல்லிக் கனிபோல் வாழ்நாளை நீட்டும் உணவிடும் செல்லப்பா
வெள்ளித் தமிழ்த்தேர் வருவதுபோல் விளங்கும் வேங்கடர் நவாசுடனும்
ஒள்ளொளிர் நுண்கலைக் கழகத்தார் உயர்மணி மாண்புறு மதியழகர் (அவர்கள்)

அறுவரின் அருள்மனத் தருஞ்செயலால் அலர்ந்தது வள்ளுவத் தேவர்விழா
செருவர நேரினுஞ் செய்தநன்றி செப்பிட மறுப்பவர்க் குய்விலையாம்
திருநெறி குறள்நெறித் தேர்வதனைத் திரித்திடல் தமிழறம் மறையுமென
ஒருமுறை முதலறம் நன்றிநொன்னேன் ஒழுகற வாணரின் திருமுன்னே

பாயிரம் நீக்கிய ஈரறத்தைப் பகர்ந்தார் வள்ளுவர் அறப்பாலில்
ஆயிரம் அறங்களில் இல்லறமே அகிலம் உய்வுறும் முதலென்றார்
காயுங் கனியும் உண்டலுத்துக் கசந்ததும் மேற்கொளல் துறவறமே
ஓயும் உடலுயிர் உள்ளவரை உலகியற் கேற்றதவ் வறமென்றார்

நூற்றுப் பதின்மூன் றதிகாரம் நுவலும் அறத்தை வலியுறுத்தி
ஏற்றி ஓரதி காரத்தில் இயம்பிய அறங்களைக் கற்றறிந்தால்*
காற்றைப் போல்மனம் மாற்றமுறும் கடவுள் அருளறம் தோற்றமுறும்
ஆற்றைக் கடந்திட முடியார்க்கும் அலைகடல் தாண்டவும் கலந்தோன்றும்

செல்லரிக் கின்ற மரம்போலும் செந்தமி ழழிக்கும் பிறமொழிகள்
கொல்லரி வாளை முத்தமிடும் குணமிருக் கின்ற அறிவிலிகள்
நெல்லரிக் கட்டுகள் சுமப்பதுபோல் நிமிர்பதர் சுமப்பதில் அறமில்லை
வெல்லரி மாவினம் வீழ்ந்தழிய வீண்முழக் கிடுவதும் அறமில்லை

கூடித் தின்றதும் பறந்துவிடும் குருவிக் கூட்டென வாழுவதும்
வாடித் தவிக்கும் தமிழ்ப்பயிர்க்கு வாய்க்கால் வழிகளை மூடுவதும்
பேடிக் கைவாள் போலிருக்கும் பேரிலக் கியப்புகழ் பாடுவதும்
நீடிக் கும்நிலை மாறாமல் நிழல்தான் தமிழறம் நிலையில்லை

ஈதல் இசைபட வாழ்தலறம் எதிலும் நடுநிலை தேர்தலறம்
சாதல்; வருமெனத் தெரிந்தாலும் சான்றோர் சொல்செயல் சார்தலறம்
காதல் பிறவுயிர் காத்தலறம் கள்ளம் பொய்புலால் நீத்தலறம்
ஆதன் வீடுற வேண்டுமெனில் அன்பின் வழியுயிர் சேர்த்தலறம்

வேரை அழுகிட விட்டுவிட்டு விரிகிளை இலைகளில் நீர்தெளித்தே
ஊரை ஏய்க்கிற நம்செய்லால் உலகில் குறளறம் உயர்வதுண்டா?
காரைக் களைகளை நீக்காமல் கழனியிற் பயிரிடும் உழவருண்டா?
தேரைக்(கு) ஆண்டவன் உணவளிப்பான் தேன்தமிழ்ச் சொல்லறம் யார்வளர்ப்பார்?

இனியவை கூறி விருந்தோம்பி இன்னா செய்வதை விடுதலறம்
முனிவதை அடக்கித் தவமியற்றி முழஒப் புணர்வதைத் தொடுதலறம்
அணியணி யாய்த்தமிழ்ச் சொல்லழிவை அகிலத் தமிழினம் தடுத்தலறம்
மணிமணித் தமிழ்ப்பெயர் மறையாமல் தக்களுக் கிடுவதே மானமறம்

பாலுந் தேனும் பழச்சாறும் பருகிக் கொழுத்த பாம்புகளை
நாளும் வளர்க்கும் தமிழினமே நரியறி வடிமை ஆனிரோ?
காலுந் தலையுந் தெரியாமல் கால்நடை மேய்த்து வந்தவரைத்
தோளில் சுமப்பதை விடமறுத்தால் தொல்லறம் தமிழறம் வாழ்ந்திடுமா?

வரிசைப் பிடித்தன கொண்டாட்டம் வளர்தமிழ் நிலைதான் திண்டாட்டம்
அரிசியை நீக்கிய உமிநாட்டம் ஆகா தெனப்பகை பழிநாட்டம்
பரிசைப் புகழ்பெற வம்பாட்டம் பகுத்தறி வோமுயற் கொம்பாட்டம்
இரிசை நீக்கிட எழமாட்டோம் இன்தமிழ் அழிவதற்(கு) அழமாட்டோம்!

ஈன்றாள் பசித்துயர் கண்டாலும் இழிச்செய லாலதை நீக்காதே
தோன்றாத் துறைகளை முடித்தாலும் துளியுஞ் செருக்குளஞ் சேர்க்காதே
நான்தமி ழினமென நடிப்பாரை நம்பியுன் ஆற்றலை இழக்காதே
வான்றமிழ் வள்ளுவர் வழங்கறங்கள் வாழ்வது வண்டமிழ் வழக்காறே!


* -அறன்வலியுறுத்தல்

பாத்தென்றல்.முருகடியான்!

கருத்துகள் இல்லை: