வெள்ளி, 19 டிசம்பர், 2008

கவிதை!

குரங்கென ஒருபொருள் குறிக்கிறது
குலத்தமிழ்ப் பாட்டென விரிகிறது
திறந்தருங் கதையது விளைக்கிறது
திரண்டநல் விதையதில் முளைக்கிறது
வரந்தரும் “தை”யெனும் திங்களையும்
வைத்தவள் தைத்தவள் தையலவள்!
ஆறந்தரும் முனைவரின்ழூ விளக்கமிது
அடுத்தொரு முறையிலும் விளங்குமிது!

முதலெழுத் தழித்தால் விதையாகும்
நடுவெழுத் தழித்தால் கதையாகும்
முதலும் நடுவும் அழித்தால் “தை”
வினையும் பெயரென வருவாள்தை
முதலிரண் டெழுத்தில் பாட்டுவரும்
முள்மர மேறும் குரங்குவரும்
முதல்தாய் மொழியின் பெருமையிது
மூன்றெழுத் தின்ப அருமையிது!

முனைவர்- முனைவர் சுப.திண்ணப்பன்

பாத்தென்றல்.முருகடியான்

செவ்வாய், 16 டிசம்பர், 2008

இறையருளோ?

நாயர் பிடித்த புலிவால்போல்
நானும் பிடித்தேன் கவிவாலை!
காயும் கனியும் பறித்துண்டு
களிப்பில் கசப்பில் கலக்குண்டு
தேயும் வயதும் தெரியாமல்
திரையும் நரையும் புரியாமல்
ஓயும் உடலென் றுணராமல்
உழைக்கச் செய்வதும் இறையருளோ?

மரபுச் சிலுவை சுமந்தாலும்
மரண மனக்கவல் தொடவில்லை!
சிறகை உறவுகள் அறுத்தாலும்
செந்தமிழ்த் தாய்க்கை விடவில்லை!
பரவிச் சென்றன உணர்வலைகள்
பழியில் புகழில் சிலநிலைகள்!
திரவஞ் சிலநாள் திடஞ்சிலநாள்
திரிந்திட வைப்பதும் இறையருளோ?

எண்ணத் தறியில் நூலிழையில்
எத்தனை உடைகள் நெய்தாலும்
வண்ணப் பணமெனும் நிறப்பூச்சு
வாய்த்தால் வளர்வது புகழ்ப்பேச்சு
இன்னல் இழப்பும் எத்தனையோ,
இறைவன் தந்ததென் றெண்ணாமல்
என்னால் வந்ததே எனநினைக்கும்
இயல்பைக் கொடுத்ததும் இறையருளோ?

பாத்தென்றல்.முருகடியான்

சனி, 13 டிசம்பர், 2008

சீதைபோல் ஆகுந் தமிழ்!

அக்கதைச் சொன்ன தைப்போல்
அரக்கர்கோன் அவளைத் தூக்கி
மிக்கவான் வெளியே செல்ல
மீள்வகை அறியாச் சீதை
அக்கணம் ஆடை எல்லாம்
அணங்கவள் வீசி னாளாம்!
திக்கறிந் தவளை மீட்கத்
திருமகன் வருகைக் காக!

கற்பனை மலைமே லேறிக்
காட்டிய கற்புக் காட்சி
அற்புதம் என்பார் கொஞ்சம்
ஆய்ந்தறிந் தெண்ணிப் பார்க்க!
நற்றமிழ்ச் செஞ்சொல் லாடை
நாமவிழ்த் தெறிந்தா லந்தக்
குற்றமும் சீதை செய்த
குற்றமென் றாகு மன்றோ?

நாளெலாம் தமிழ்ச்சொல் நீக்கி
நாடகம் கவிதை காதை
ஆளலாம் பிறச்சொல் லென்றால்
அழிவதெம் தமிழ்தா னன்றோ?
மீளலாம் பிறசொற் சேர்த்து
மிளிரலாம் என்பார்க் கொன்று
ஏலலாம் எளிமை மற்றோர்
இரவலை நீக்கிப் போக்கி

தனித்தியங் கிடுமோர் ஆற்றல்
தாங்கினாள்! பல்லாய் வாளர்
கனித்தமிழ் மூத்த தென்றுங்
கழறினார்! கண்டம் ஏழில்
இனித்தசெந் தமிழ்ச்சொல் எங்கும்
இருக்குதென் றியம்பி னார்கள்!
அணித்தமிழ் அறிவைக் கொஞ்சம்
அறிந்தபின் எழுத லாமே!

வரம்பிலாப் புளுகைக் கொட்டி
வடித்தவால் மீகிப் பாட்டில்
அறம்பல அடுக்கிச் சொல்லி
அருந்தமிழ்ப் பண்பை நாட்டித்
திறம்பல வுடைய கம்பன்
தீட்டிய தேன்சொற் பாப்போல்
உரம்பல இட்டுத் தூய
ஒளிர்தமிழ் உயர்வைக் காப்போம்!

பாத்தென்றல்.முருகடியான்

புதன், 10 டிசம்பர், 2008

அதிகம்!

நாத்திகனாய் இருந்ததனால்
நானிழந்தத் தமிழதிகம்!
நாத்திகனாய் இருந்ததனால்
நானறிந்த அறிவதிகம்!
நாத்திறத்தார் சொல்,எழுத்தால்
நடைமயங்கி நானெடுத்த
பாத்திறத்தை அறியாமல்
பா,திறம்போ னதேயதிகம்!

காதலெனுந் தேனுணர்வில்
கடமைமறந் தேனதிகம்!
சேதமிடும் விலங்குணர்வில்
சேர்ந்திருந்த நாளதிகம்!
பேதைகளைப் பேரறிவுப்
பேழையென்ற நினைப்பதிகம்!
ஏகமிலாப் பொதுவுணர்வில்
இருந்ததுதான் மிகஅதிகம்!

எல்லார்க்கும் நன்மைசெய்ய
எண்ணுகின்ற குணமதிகம்!
நல்லராய் நினைத்ததனால்
நானிழந்த பணமதிகம்!
புள்ளார்க்கும் மனக்காவாய்
பூத்திருக்கும் கவியதிகம்!
கள்வடிக்கும் செந்தமிழைக்
காப்பதிலென் உணர்வதிகம்!

பாத்தென்றல்.முருகடியான்