புதன், 29 ஜூலை, 2009

நாட்டை நாடு!

ஒன்றே நாடு!
ஒன்றே மக்கள்!
ஒன்றே சிங்கப்பூர்!
என்றே பாடு!
என்றும் பாடு!
இனிக்கும் சிங்கப்பூர்!

(ஒன்றே…)

புகைத்தால் உனக்குக் கேடுவரும்!
பொய்சொன் னாலும் கேடுவரும்!
பகைத்தால் நமக்குள் கேடுவரும்!
பண்பும் பணிவும் வெற்றிதரும்!

(ஒன்றே…)

காலையில் எழுந்து குளித்துவிடு!
கடமையை உயிராய் மதித்துவிடு!
சோலையில் நடந்து பயிற்சியெடு!
சொன்னதைச் செய்ய முயற்சியெடு!

(ஒன்றே…)
பாத்தென்றல் முருகடியான்

சனி, 25 ஜூலை, 2009

அமைச்சராகலாம்!

கண்ணே! கண்ணே!
கண்ணின் மணியே!
பொன்னே! பொன்னே!
பொன்னின் ஒளியே!
உன்னை நம்பி
நாடும் இருக்குதிங்கே!

(கண்ணே…)

நாளைக்கு நீயொரு
மந்திரி ஆவாய்!
நல்ல மருத்துவம்
செய்திடப் போவாய்!
வேளைக்குக் கல்வி
கற்றிடு தம்பி!
வெற்றி உனக்கே
நிச்சயம் நம்பி!

(கண்ணே…)
பாத்தென்றல் முருகடியான்

செவ்வாய், 21 ஜூலை, 2009

அம்மா சொல்கேள்!

அம்மா சொல்கேள் அன்போடு!
ஆசான் சொல்கேள் அறிவோடு!
சும்மா இருந்தால் புகழேது?
சோம்பல் நீக்கி நலம்தேடு!

(அம்மா…)

கதிரவன் வருமுன் எழுந்துவிடு!
கருத்துடன் பாடம் படித்துவிடு!
புதுப்புதுக் கலையில் பயிற்சியெடு!
பொய்மொழி விலக்கிப் பணிந்துவிடு!

(அம்மா…)
பாத்தென்றல் முருகடியான்

சனி, 18 ஜூலை, 2009

பணிவு!

ஓடி ஆடிப் பாடு!
உடலுக் குறுதி தேடு!
கூடி வாழப் பழகு!
கொண்டு போற்றும் உலகு!

(ஓடி…)

கல்வி தானே கண்கள்!
கற்க வேண்டும் நீங்கள்!
நன்மை செய்யும் துணிவும்
நாளும் வேண்டும் பணிவும்!

(ஓடி…)

உண்மை பேசும் மனமும்
ஒழுக்கம் காக்கும் குணமும்
அன்னை தந்தை சொல்லும்
அன்பும் உலகை வெல்லும்!

(ஓடி…)
பாத்தென்றல் முருகடியான்

புதன், 15 ஜூலை, 2009

அன்பைப் போற்று!

பள்ளிப் போகலாம்
பள்ளிப் போகலாம்
பாடும் பறவைகளே!
அள்ளி உண்ணலாம்
அள்ளி உண்ணலாம்
அமுதம் கல்விகளே!

(பள்ளி…)

பேசும் கிளிகளே!
பிள்ளை மலர்களே!
பெற்றோர் தெய்வங்களே!
வீசும் தென்றலே!
வீணை ஒலிகளே!
அன்பைப் போற்றுங்களே!

(பள்ளி…)
பாத்தென்றல் முருகடியான்

ஞாயிறு, 12 ஜூலை, 2009

கடவுள் ஒன்று!

கடவுள் ஒன்று
கருணை ஒன்று
மனிதர் ஒன்று

கற்க வேண்டும்
நல்ல பண்பைக்
கோயில் சென்று

(கடவுள்…)

உடலைப் பேண
ஓடி ஆட
சோலை உண்டு

உண்மை ஒழுக்கம்
உதவி செய்தல்
உயர்ந்த தொண்டு!

பாத்தென்றல் முருகடியான்

வெள்ளி, 10 ஜூலை, 2009

குழந்தை!


நொச்சிக் கொழுந்து காலாட்டி
நூறு தாமரை முகங்காட்டி
உச்சி முகர்ந்தும் உவந்தேற்றி
உலகம் வணங்கும் உயர்தெய்வம்!

மணிவா சகத்தை வென்றெடுக்கும்
மழலை வாசகம் தேனளிக்கும்
கனிவாய்க் கன்னியர் முத்தமதை
கடைவாய்ச் சொல்லால் தோற்கடிக்கும்!

மற்போர் வீரர் மன்னவரின்
மார்பில் உதைக்கும் மாவீரன்!
சொற்போர் நிகழ்த்தி வெல்வாரும்
சுருள்வார் குழந்தை வாய்மொழிக்கே!

தத்தி நடப்பதில் ஓரின்பம்
தத்தை மொழிமற் றோரின்பம்
பொத்தி அணைத்திடப் புத்தின்பம்
புன்னகை தரும்பொன் னுலகின்பம்!

மலரும் பூக்கள் வாடிவிடும்
மண்தொட மழைநீர் தூய்மைக்கெடும்!
புலரும் பொழுதில் நிலம்போலுன்
பூவுடல் வாடா ஆடகப்பொன்!

தாத்தா தாத்தா என்றென்னைத்
தாவிடும் போதில் நானுன்னைப்
பார்த்தால் பரம்பொருள் தெரிகிறதே!
பாவச் சுமைகள் குறைகிறதே!

முதுமைக் கால நோய்நீக்கும்
மூலிகைத் தென்றல் உன்வரவே!
இதுவரைக் கவிஞர் எழுதாத
இறைவனின் கவிதை குழந்தைகளே!

பாத்தென்றல் முருகடியான்

ஞாயிறு, 5 ஜூலை, 2009

குருதிக் கொடை!


அட்டைகள் மாந்தருக்கு
அர்த்தமீந் திடுமாம் ஞானப்
பெட்டைகள் தமிழைத் தாங்கித்
தண்ணொளி தருமாம் நாற்றக்
குட்டைகள் உணவாய் மாறி
உணவளித் திடுமாம் கோழி
முட்டைகள் தமிழம் மிக்கு
முத்துகள் தருமாம் கேண்மின்!

கோட்டைகள் இடிந்து போச்சாம்!
கோவேறிக் கழுதை மரபுச்
சாட்டையை வீசிச் சோழர்
சரித்திரம் படைக்க எண்ணிப்
பாட்டையை மாற்றிப் பாசப்
பலனளித் திடுமாம் செய்தக்
கேட்டைநாம் மறக்கக் கம்பன்
கேண்மையாம் வைர மாச்சாம்!

இடையிலே மானம் விற்று
இடையிலே அறிவுங் கெட்டு
இடையிலே பொருளும் பெற்று
இடையிலே தேர்தல் வந்தால்
இடையிலே கம்பன் மேலாம்!
இடையினம் தமிழின் வேலாம்!
இடையிலே தமிழைச் சாய்த்த
இடருரைக் கோளைக் கேண்மின்!

மரபென்ற வானைத் தாங்க
மண்புழுப் படமா? அவர்போல்
கரவென்ற கரிசல் காடா
காத்திடுங் கழநி? பாட்டைப்
பரமென்றப் படிஏ றாதப்
பாவிகள் வரவால் நம்மை
அறமென்ற அருளைக் காட்டி
ஆண்டிடு வாராம் கேண்மின்!

ஞானத்தை விற்றல் மேன்மை
மானத்தை விற்றல் கீழ்மை!
ஈனத்தால் பொருளைச் சேர்க்க
எண்ணுவார்க் கில்லைத் தூய்மை!
வானத்தைப் போலி ருந்த
வண்டமிழ்க் கண்ண தாசர்
கானத்தைக் காதால் கேட்டுக்
கதிபெறு! அதுவே வாய்மை!

பன்றிகள் குட்டிப் போடக்
பரிந்துரைத் தவனே! முhனக்
குன்றுகள் சரிந்து வீழக்
குண்டுவைத் தவனே! வாழ்வில்
வென்றிகொண் டதுபோல் எண்ணி
வீரியம் தமிழுக் கீய
இன்றுநீ இரத்தம் தந்தால்
இன்தமிழ் மன்னிப் பாளா?


பாத்தென்றல் முருகடியான்