புதன், 30 ஜூலை, 2008

உழவின்றி உய்யா துலகு!

வணிகப் பெருக்கம் வலிமை மிகுந்த
அணுவின் துணையாலு மாகும் -கணைகள்
எழுகின்ற காலம் இதுவென்ற போதும்
உழவின்றி உய்யா துலகு!

குண்டுகளால் மக்கள் குருதிக் குளம்நீந்தும்
மண்டுகளால் வையம் மகிழ்ந்திடுமா? -என்றும்
மழையின்றிப் புல்லும் மலரா ததைப்போல்
உழவின்றி உய்யா துலகு!

பாம்பைப் பிடித்துப் படராலங் கொம்பேறித்
தேம்பித்தன் வால்பார்த்துத் தேர்வின்றிக் -கூம்பி
விழும்வாலி போன்று விளையும் அறிவியலும்
உழவின்றி உய்யா துலகு!

பனித்தேர் செதுக்கிப் பகல்முன் இழுப்பார்
அணித்தேர்த் தமிழை அழிப்பார் -கணித்த
முழவின்றி ஓசை முறையின்றிப் பாட்டுய்யா
துழவின்றி உய்யா துலகு!

படைக்கலன் செய்வார் பனிநிலாச் செய்வார்
உடைகலன் கப்பலுடன் ஊர்தி -படைப்பார்
பழுதின்றி எந்தப் பணிசெய்த யார்க்கும்
உழவின்றி உய்யா துலகு!

உலகப் பெருந்தேர் உருள உதவி
விலக்க முடியாத வேராய் -கலகக்
குழுவும் உணவுண்ணக் கைகாட்டும் அச்சாம்
உழவின்றி உய்யா துலகு!

பாத்தென்றல் முருகடியான்.

புதன், 23 ஜூலை, 2008

அணுவாற்றல் வேண்டும் அறி!

பலகல் நிலத்தைப் பறித்தாரே சீனர்;
சிலகல்லை மீட்டுச் சிரிக்க! -உலகில்
இனிநம்மைக் காக்க இறையாண்மைப் பூக்க
அணுவாற்றல் வேண்டும் அறி!

இருளில் கிடந்திழியும் இந்திய மண்ணின்
பொருளைப் பெருக்கிப் புதுக்கும் -அருளைப்
பணிவுந் தருமெனினும் பாரார் மதிக்க
அணுவாற்றல் வேண்டும் அறி

வல்லரசை வாழ்த்தும் வழக்கம் வளர்வதனால்
நல்லரசை ஏய்க்கும் நடைமுறையால் -உள்ளார்
அணுவாளக் கற்றவரென் றாவதனால் யார்க்கும்
அணுவாற்றல் வேண்டும் அறி!

அடிமை விலங்கை அணியாகச் சூடும்
மடிமை மடிதூங்கும் மக்கள் -விடிய
உணர்வாற்றல் ஓங்க உலகச் சமத்திற்(கு)
அணுவாற்றல் வேண்டும் அறி!

கல்லாதான் சொல்லும் கவியைச் சிலரவையில்
இல்லாப் பொருளேற்றும் இன்னுரையால் -பொல்லா
நிணச்செருக் குற்று நெறிமறப்பா ருய்ய
அணுவாற்றல் வேண்டும் அறி!

புதுமைப் புதுமையெனப் போக்கற் றிருள்வான்
பொதுமையைப் பூசிப் புரள்வார் -எதுமெய்?
கணித்தறியும் ஆற்றல் கலைவிளக் கேற்ற
அணுவாற்றல் வேண்டும் அறி!

பாத்தென்றல் முருகடியான்