ஞாயிறு, 5 ஜூலை, 2009

குருதிக் கொடை!


அட்டைகள் மாந்தருக்கு
அர்த்தமீந் திடுமாம் ஞானப்
பெட்டைகள் தமிழைத் தாங்கித்
தண்ணொளி தருமாம் நாற்றக்
குட்டைகள் உணவாய் மாறி
உணவளித் திடுமாம் கோழி
முட்டைகள் தமிழம் மிக்கு
முத்துகள் தருமாம் கேண்மின்!

கோட்டைகள் இடிந்து போச்சாம்!
கோவேறிக் கழுதை மரபுச்
சாட்டையை வீசிச் சோழர்
சரித்திரம் படைக்க எண்ணிப்
பாட்டையை மாற்றிப் பாசப்
பலனளித் திடுமாம் செய்தக்
கேட்டைநாம் மறக்கக் கம்பன்
கேண்மையாம் வைர மாச்சாம்!

இடையிலே மானம் விற்று
இடையிலே அறிவுங் கெட்டு
இடையிலே பொருளும் பெற்று
இடையிலே தேர்தல் வந்தால்
இடையிலே கம்பன் மேலாம்!
இடையினம் தமிழின் வேலாம்!
இடையிலே தமிழைச் சாய்த்த
இடருரைக் கோளைக் கேண்மின்!

மரபென்ற வானைத் தாங்க
மண்புழுப் படமா? அவர்போல்
கரவென்ற கரிசல் காடா
காத்திடுங் கழநி? பாட்டைப்
பரமென்றப் படிஏ றாதப்
பாவிகள் வரவால் நம்மை
அறமென்ற அருளைக் காட்டி
ஆண்டிடு வாராம் கேண்மின்!

ஞானத்தை விற்றல் மேன்மை
மானத்தை விற்றல் கீழ்மை!
ஈனத்தால் பொருளைச் சேர்க்க
எண்ணுவார்க் கில்லைத் தூய்மை!
வானத்தைப் போலி ருந்த
வண்டமிழ்க் கண்ண தாசர்
கானத்தைக் காதால் கேட்டுக்
கதிபெறு! அதுவே வாய்மை!

பன்றிகள் குட்டிப் போடக்
பரிந்துரைத் தவனே! முhனக்
குன்றுகள் சரிந்து வீழக்
குண்டுவைத் தவனே! வாழ்வில்
வென்றிகொண் டதுபோல் எண்ணி
வீரியம் தமிழுக் கீய
இன்றுநீ இரத்தம் தந்தால்
இன்தமிழ் மன்னிப் பாளா?


பாத்தென்றல் முருகடியான்

கருத்துகள் இல்லை: