திங்கள், 16 மார்ச், 2009

தமிழ்முழங்கக் கேட்போம்!

செம்மொழியாய் இருப்பதற்குத்
தகுதிபதி னொன்றாம்!
அம்மொழியும் தனித்தியங்கும்
ஆற்றலதில் ஒன்றாம்!
நம்மொழிக்கும் அத்தகுதி
நன்கமைந்த துண்டாம்!
இம்மொழிக்குள் இரவல்மொழி
கலப்பதுகற் கண்டா?

எளியதமிழ் என்பதென்ன?
இரவல்மொழிக் கலப்பா?
வலியதமிழ் ஏதுமில்லை
வழக்கமாகும் உழைப்பால்!
கிளிகளிங்கு பேசுமன்றோ
சொல்லுகின்ற சொல்லை!
தெளியவேண்டும் தமிழுலகம்
மலரழிக்கும் முள்ளை!

வானுயர்ந்த தோற்றமந்த
வாமனைப்போல் குறையும்...
தேனளிக்கும் மலர்க்காவும்
தீப்பொறியால் எரியும்...
ஊனமுற விட்டிடாமல்
ஒண்டமிழைக் காப்போம்!
ஆனவரை நம்குழந்தை
தமிழ்முழங்கக் கேட்போம்!

பாத்தென்றல்.முருகடியான்

கருத்துகள் இல்லை: