வியாழன், 26 மார்ச், 2009

தேசிய திருவிழா!

மான்பிடித் தேயிரை யாக்கிட ஓடிய
மாவரி மாநிலத்தை... -கடல்
மீன்பிடிப் பார்சிலர் மேவிய குடில்களும்
மின்மினிக் காநிலத்தை...

தேன்குடித் தாடிடத் தேன்மலர் சூடிடத்
திருத்திய தாருழைப்பு? –ஒளி
வான்கதிர் நிலவுடன் வையம்பு கழ்ந்திட
வைத்தது நம்பிழைப்பு!

காட்டுடன் மேட்டையும் கல்லுடன் முள்ளையும்
கடந்தன நம்கால்கள் -எழில்
வீட்டையும் பாட்டையும் வியர்வையி லெழுதி
விளைந்தன நம்தோள்கள்!

பசிக்கடி உள்ளுற கொசுக்கடி வெளியுற
பட்டது யாருடம்பு? -உயிர்
பொசுக்கிடு வாரிடம் பூவென நசுங்கிய
தமிழரென விளம்பு!

காற்பந் துதைப்பதைப் போலுதைத் தாரந்தக்
காலத்தை எண்ணுகிறேன்! -இன்று
நாற்பத் திரண்டக வைப்புத் தமுதத்தை
நானள்ளி உண்ணுகிறேன்!

வையகம் கையக மாக்கிவிட் டோமிந்த
வாழ்;வை உயர்த்திவிட்டோம்! -பெரும்
பொய்யகத் தாரையும் தூக்கிவிட் டோம்வளம்
பூத்திட ஆணையிட்டோம்!

கண்ணீர்த்; துளிகளை வைரங்க ளாக்கிடக்
கையிரு நான்குபெற்றோம்! -நம்மேல்
வெந்நீரை யூற்றிய வீணர் விழிபெற
வீரப் படையும்பெற்றோம்!

வானிலோர் தண்ணிலா வையத்தி லின்;நிலா
தானவள் சிங்கையம்மா! -மக்கள்
ஊனிலு முயிரிலும் மொன்றிக் கிடந்திடும்
உண்மையே சிங்கையம்மா!

எப்படி வந்ததிப் படியொரு வளமெனத்
தப்படிப் பார்நினைக்க... -உழைப்
பைப்படி யாகவே எண்ணி நடந்தவர்
உயர்வென உலகுரைக்க...

முப்படி ஒருபடி சமய வெறிப்படி
முனைமழுங் கும்படியாம்! -இனத்
தப்படி வேற்றுமை சட்டம் சமத்துவ
சார்ந்த முறைப்படியாம்!

தூசித் துகள்களைத் தட்டித் துலக்கிய
தூய திருநிலத்தை -எழில்
வீசுங் கொடியசைந் தாடுந் திருவிழா
தேசிய நாள்விழாவே!

பாத்தென்றல்.முருகடியான்

கருத்துகள் இல்லை: