புதன், 10 ஜூன், 2009

காடு!

கரும்பச்சை முண்டாசு கழுத்துவரை சன்யாசி
கரும்புகளும் பண்ணிசைக்கும் சொர்க்கபுரி சகவாசி!

காற்றுக்குத் தலையாட்டி காருருக்கும் எரியீட்டி
நோற்றுக்கொண் டேஉலகின் நோய்விலக்கும் வழிகாட்டி!

நரைவந்தால் கொட்டிவிடும் நல்லதலை உன்தலைதான்
புதைத்தாலும் பூமடியில் புதவைரம் உன்னுடல்தான்!

பச்சைநிறத் தலைமுடியில் பறவைகளைத் தூங்கவிட்டு
அச்சுறுத்தும் விலங்குகளை அடிமடியில் ஆடவிட்டு

நுச்சுக்காற்றைக் குடித்து நற்காற்றை வெளிப்படுத்தும்
ஆச்சுதனும் நீயல்லவா! அறம்பரப்புந் தாயல்லவா!

வெட்டியிவன் வீட்டுக்கே விறகாகிக் கதவாகி
பட்டமரப் பெயரோடு பால்கொடுக்கும் காமதேனே!

கடன்பட்டு வாழ்வதிலும் காடம்மா உன்னைப்போல்
உடன்கட்டை ஏறிவிட்டால் உன்மானம் எனக்கும்வரும்!

அவஞ்செய்தேன் அறிவிழந்தேன் ஆரண்ய ஆரணங்கே
தவஞ்செய்து நான்பிழைக்கத் தாயேநின் மடிதருக!


பாத்தென்றல் முருகடியான்

கருத்துகள் இல்லை: