செவ்வாய், 31 மார்ச், 2009

துமுக்கி தூக்குவோம்!

வட்டாரக் கூட்டம்; சாதி
வட்டார நாட்டம்; தமிழன்
ஒட்டாமலே பிரிந்துப் பிழைக்கும்
ஒட்டார வேட்டம்!

சென்னைத் தமிழனாம்; மதுரை
அன்னைத் தமிழனாம்; தஞ்சை
மன்னைத் தமிழனென்று பேசும்
மானத் தமிழனாம்!

தென்னவன் முதலா? பகைமைத்
திராவிடன் முதலா? இன்றும்
உண்ணி உறிஞ்சும் வடவர்
உலகத்திம் முதலா?

இல்லை என்பவன்; மறைவில்
இருக்கு தென்பவன்; அறிவும்
உள்ளதென்று பதவிதேடும்
உணர்வில் வல்லவன்!

மானம் உள்ளவன்; தமிழை
மலர வைப்பவன்; புகழை
ஈனவழியில் ஈட்டுமெவனும்
இழிந்த பிறப்பவன்!

மதத்தின் பெயரிலே; தமிழின்
மானம் அழிப்பவன்; வேற்றுப்
பதத்தை நம்பிப் பயணம்போகும்
பார்வைக் குறைந்தவன்!

கஜினி ஆளலாம்; நடிகன்
ரஜினி ஆளலாம்; நாளை
அசினும் ஆளமுல்லைப் பெரியாறு
ஆறும் போகலாம்!

தமிழைக் காப்பதாய்; சொல்லித்
தம்மைக் காக்கிறார்; நம்மை
உமியை உண்ணச் சொல்லிஅரியை
உறவுக் களிக்கிறார்!

குமரிக் கடலிலே; நம்மைக்
கொன்று குவிக்கிறான்; அவனைத்
தமரனென்று தில்லிக்காரன்
தயங்கி நிற்கிறான்!

துமுக்கி தூக்கணும்; இனியும்
தூதைத் தவிர்க்கணும்; வீணில்
கமுக்கம் பேசும்கட்சி கழகம்
கரிசை நீக்கணும்!

தமிழன் என்பவன்; செருப்பைத்
தலையில் தாங்குவான்; என்று
உமிழும் வாயில் எரியுந்தீயை
ஓங்கிச் செருகணும்!

பாத்தென்றல்.முருகடியான்

கருத்துகள் இல்லை: