திங்கள், 29 ஜூன், 2009

சொல் தலைவா சொல்!


தாயும் நீ! துந்தை நீ!
தமிழும் நீ! சவையும் நீ!
பாயும் நீ! துயிலும் நீ!
பகுத்தறிவும் அறிவும் நீ!
ஓயும்நா ளில்லாமல்
உழைக்குஞ்செங் கதிரும் நீ!
நீயேயெம் உயிரென்று
நினைத்திருந்தோம் சிலர்சொல்போல்
பாயும்நந் தமிழ்ப்புலிக்குப்
பகையாநீ! சோல்தலைவா!

வெற்றியுடன் தோல்வியுற்றால்
விழிநீராய் விழுபவன்நீ!
பற்றவரும் பகைமுகத்தைப்
பார்த்தமனத் தெழுபவன்நீ!
கற்றடங்கி நின்றவரின்
கலைமனத்தை உழுபவன்நீ
நற்றமிழ்த்தாய் நலன்காக்க
நலிந்தவர்கால் தொழுபவன்நீ!
இற்றைநிலை இதுதானா?
என்பதுதான் கேள்வியினி!


பாத்தென்றல் முருகடியான்

வியாழன், 25 ஜூன், 2009

கூற்றலைக் கொடுமை!

சங்கம் பொறுக்கிய கடற்கரை எங்கும்
அங்கம் பொறுக்கிடும் அரக்கக் கொடுமை!
சிப்பிகள் பொறுக்கிய நெய்தற் கரையில்
உப்பிய உடல்கள் சிப்பிக ளாச்சே!
உப்புக் கண்டம் மீனவர் போட்டார்
உப்பியப் பிண்டம் கடல்தாய் போட்டாள்
முத்துக் குளிக்க மூழ்கிய கடலில்
செத்தவர் வாயில் சிதறிய பற்கள்
குன்றும் முள்ளும் குவளை மலரும்
மண்டி இருந்த மணற்பரப் பெல்லாம்
பெண்டு பிள்ளை பிஞ்சும் பூவும்
நண்டுகள் ஓடாய் நைந்து கிடந்தன
நீரலை ஏறி நீந்திய மாந்தரைப்
பேரலை ஏறிப் பிணமாக் கியதே!
அடிதாங் காமல் அலறிய ஆழி
படிதாண் டியதால் பட்டது வையம்!
ஈரக் கடலில் இத்தனை நெருப்பா?
கூரை பிடுங்கிடும் எருமைப் பிறப்பா?
வெள்ளிச் சிரிப்பால் விழுங்கிய கடலால்
வெள்ளுடை ப+ண்டன தமிழச்சி உடல்கள்
தாயை இழந்த தளிர்களின் ஓலம்
சேயை இழந்த தாயழுங் காலம்
தந்தது எதுவோ? தலைவரும் யாரோ?
இந்த நிலைக்கு எவனோ? சிவனோ?ட
ஏசு பிறந்த மறுநா ளிந்தக்
காசு பிறக்கக் காரண மென்ன?
வாடிய பயிரால் வாடிய மாந்தன்
ஆடிய மண்ணில் ஆழியின் ஆட்டம்!
மழைகொடுப் பவளே மரணம் கொடுப்பதா?
பிழைபொறுப் பவளே பிழைகள் செய்வதா?
குமரியைக் குடித்த கொடிய வளே!நீ
அமரிட வந்தாய் அறமுனக் கில்லை!
ஏவிய தெதுவோ? ஏவரற மொழியோ?
பாவிநீ கடலே! பழிபுரிந் தாயே!
கிழித்தால் மீண்டும் ஆக்கிடு வாயா?
மழித்தால் முளைக்கும் மயிரா உயிர்கள்?
மொழித்தாய் தோன்றிய முதல்நி லத்தை
இழித்தாய் கடல்நீ! இயற்கையு மில்லை!
கட்டு மரங்கள் மிதப்பதைப் போன்று
கட்டுடல் மாந்தர் கட்டா மரங்களா?
நெஞ்சைக் கசக்கிப் பிழிந்த நிகழ்வு
துஞ்சிய மக்களைத் துடைத்தநீ ரிழிவு!
மீன்களை நாங்கள் உண்டதற் காக
மீன்களுக் கெம்மை இரையிட் டாயோ?
தண்மை இருந்தும் தாய்மன மில்லாப்
பெண்மை நீயெனப் பேசிட வைத்தாய்!
கண்மை தீட்டிடக் கணவாய்ப் பிடிப்போம்
வன்மைத் தமிழினம் வளரும்
உண்மை இதையிவ் வுலகம் உணருமே!


பாத்தென்றல்.முருகடியான்

சனி, 20 ஜூன், 2009

முடிச்சி!

காந்தக் கயிற்றில் தொங்கிடுங் கோள்கள்
ககனம் மிதந்திடும் கோள்களே!
கூந்தலை வளர்த்திடும் கோதையர் இடுவதும்
குடைபோல் வடைபோல் முடிச்சுகளே!

மூட்டுகள் எனும்பல முடிச்சிகள் போட்டதில்
ஊட்டினார் உயிர்வளி ஆண்டவனார்
பூட்டிய முடிச்சுகள் அவழ்ந்திட வலிவிழுந்து
போய்விடும் மாந்தரின் தாண்டவவேர்!

தனித்தனித் தாள்களை ஊசிநூ லிட்டதைக்
கோர்த்து முடிச்சிட நூலாகும்!
இனித்திடும் தமிழினில் தளையொரு முடிச்சென
இருந்திடத் தமிழ்க்கவி வேலாகும்!

ஆண்முடிச் சென்பது படிந்திடும் முடிச்சுகள்
பெண்முடிச் சென்பது படியாது!
வீண்முடிச் சென்பது மொட்டைத் தலையுடன்
முழங்கால் இணைவது முடியாது!

மாலை முடிச்சினை மலைப்பென் பாரெழில்
மலர்களைத் தொடுத்திடுந் தோரத்தால்
கூளைக் கனுப்பிடுஞ் சுருக்கெனும் முடிச்சினால்
சுருண்டன உயிர்பல காரணத்தால்!

இழையில் விழுந்திடும் முடிச்சினைப் பிரித்திடல்
எளிதென நினைப்பது தவறாகும்
பிழையெனும் முடிச்சுகள் வாழ்வுறும் மறந்திட
முடிந்தால் வாழ்விதே தவமாகும்!

பாட்டிகள் முந்தானை முடிச்சினில் இருந்தன
பணத்துடன் சாபமும் அக்காலம்
வேட்டிகள் சேலையில் முடிச்சதும் ஆண்களை
வீழ்த்திட நினைப்பதே இக்காலம்!

ஆயிர மாயிரம் கண்களைக் கொள்வது
அங்கயல் வலைபெறும் முடிச்சால்தான்
ஓய்வுறும் வரைவரும் மாந்தரின் வாழ்வினில்
உயர்வுகள் உறவேனும் முடிச்சால்தான்!

முடிச்சுகள் இல்லாத உடையோ போருளோ
மூதுல கெங்குமே கிடையாது
பிடிப்புடன் இருந்தஅத் தொப்பூழ்க் கொடியற
முடிச்சிட விலையெனில் உயிரேது?

தூண்டிலும் கயிறும் முடிச்சிடா திருந்தால்
வேண்டிய மீன்களைப் பெறுபவர்யார்?
ஆண்டியின் வயிறுறும் அரும்பசிக் குணவிடும்
முடிச்சறுந் தாலுயிர் தருபவர்யார்?

நாற்று முடிச்சுகள் வயல்களில் பிரித்திடச்
சோற்று முடிச்சுகள் உருவாகும்
காற்றை முடிச்சிடக் கற்றவர் சொற்களே
கடவுளைக் காட்டிடுந் திருவாகும்!

இஸ்த்திரி தமிழுடன் இணைத்திடும் முடிச்சினால்
எந்தமிழ்த் தீய்ந்தே கரியாச்சு
அத்திரி கருகம் முடிச்சறிந் தார்க்கே
அறிவின் கதிரொளி விரிவாச்சு!


பாத்தென்றல் முருகடியான்

திங்கள், 15 ஜூன், 2009

துன்பம் தேடும் தோகைகள்!

கச்சை அணியாத கனமுலைகள் காற்றாட
தச்சம் செதுக்காதத் தளிர்வாழைத் தொடையாட
அச்சம் மடம்நாணம் அத்தனையும் விட்டுலவிக்
கொச்சைப் படுத்துகின்ற குமரிகளே! கேளுங்கள்…

ஓடைப் புணல்நீந்தும் மீன்களுக்கும் செதிலிருக்கு
காடை புறாக்களுக்கும் கவசமாய்ச் சிறகிருக்கு
ஆடை அரைகுறையாய் ஆபாசத் திரையரங்காய்
பாடைப்பல் லாக்குநடை பயிற்சிபெறப் போவதேன்ன?

முனிவன் மயக்கமுற மோகவுடல் காட்டுகிறீர்
இனிமை விரும்புமந்த இளையர்மனம் வாட்டுகிறீர்
கனிகள் அசைத்தவர்க்கு காமவெறி ஊட்டுகிறீர்
மணிதற் பிழந்தொருநாள் மரணத்தேர் ஓட்டுகிறீர்!

முற்றும் வெளிக்காட்டி முதியோர்க்கும் தீமூட்டிச்
சற்றும் சலனமின்றிச் சாலைகளில் உலவுகிறீர்
கற்றும் அறிவிலையோ? காற்கால மானிடமோ?
கற்பும் உயிர்பறிக்கக் காரணமே நீங்களன்றோ!

கோடி விழிகளுங்கள் கோலத்தைக் கொத்தியபின்
தேடி மணமுடிக்கும் திருவாளர் கணவருக்கும்
ஊடிச் சுவைகொடுக்க உணர்ச்சியென்ன வைத்திருப்பீர்?
காடிப் பழங்கள்ளாய்க் கைத்துவிட்ட பாலாவீர்!

ஆங்கில மோகங்கொண்டு ஆசியா அழிதல்கண்டோம்
தீங்கிலாப் பண்பாடெல்லாம் தீயிலே கருகக்கண்டோம்
மாங்குயில் மயிலைப்போன்ற மகளிரின் குணங்கள்மாறி
ஓங்குதே காமச்சிந்தை உலையுதே நல்லோருள்ளம்!


பாத்தென்றல் முருகடியான்

புதன், 10 ஜூன், 2009

காடு!

கரும்பச்சை முண்டாசு கழுத்துவரை சன்யாசி
கரும்புகளும் பண்ணிசைக்கும் சொர்க்கபுரி சகவாசி!

காற்றுக்குத் தலையாட்டி காருருக்கும் எரியீட்டி
நோற்றுக்கொண் டேஉலகின் நோய்விலக்கும் வழிகாட்டி!

நரைவந்தால் கொட்டிவிடும் நல்லதலை உன்தலைதான்
புதைத்தாலும் பூமடியில் புதவைரம் உன்னுடல்தான்!

பச்சைநிறத் தலைமுடியில் பறவைகளைத் தூங்கவிட்டு
அச்சுறுத்தும் விலங்குகளை அடிமடியில் ஆடவிட்டு

நுச்சுக்காற்றைக் குடித்து நற்காற்றை வெளிப்படுத்தும்
ஆச்சுதனும் நீயல்லவா! அறம்பரப்புந் தாயல்லவா!

வெட்டியிவன் வீட்டுக்கே விறகாகிக் கதவாகி
பட்டமரப் பெயரோடு பால்கொடுக்கும் காமதேனே!

கடன்பட்டு வாழ்வதிலும் காடம்மா உன்னைப்போல்
உடன்கட்டை ஏறிவிட்டால் உன்மானம் எனக்கும்வரும்!

அவஞ்செய்தேன் அறிவிழந்தேன் ஆரண்ய ஆரணங்கே
தவஞ்செய்து நான்பிழைக்கத் தாயேநின் மடிதருக!


பாத்தென்றல் முருகடியான்

வெள்ளி, 5 ஜூன், 2009

விரலைக் குத்தி!

ஒருவிரலை ஊசிகொண்டு குத்து -வரும்
உதிரமாதல் கவியெழுதிக் கொத்து –மதப்
பெருவிரலை வெட்டியெடு
பேதமையைச் சுட்டுவிடு
கருவறைக்குள் புதுக்கருவைப் பாய்ச்சு –அந்தக்
காலத்தில்தான் அமைதிக்கதிர் வீச்சு!

மனிதனுக்காய் மதமிருந்தால் நன்மை –அந்த
மதத்துக்காய் மனிதனெனல் புன்மை –நாளும்
இனியதற்குச் சண்டையிட்டு
எரிவதிலும் சரிவதிலும்
இல்லையடா ஆறறிவின் மேன்மை –மதம்
ஏறியவர்க் கெங்கிருக்கோ ஆண்மை?

வன்செயலால் வளர்த்துவிட்ட எதுவும் -மறு
வன்செயலால் பின்னொருநாள் சிதையும் -நேற்று
அண்ணனெனத் தம்பியென
அறையிருந்து பிறந்தவர்கள்
மண்ணையள்ளிப் போட்டுக்கொள்ள மதமா? –அன்றி
மண்டையோட்டில் குண்டுபோடும் வதமா?

கால்வயிற்றை நிரப்பவில்லைச் சோறு –மதக்
காடுகளை வளர்ப்பதென்ன பேறு? -இதில்
மேல்வகுப்புக் கீழ்வகுப்பு
நூல்பகுப்புச் செய்ததனால்
பால்கிடைக்காப் பிள்ளைபல நூறு -இந்தப்
பாவத்துக்கு விதைகள்மதச் சேறு!

புத்தனுக்கே மார்பில்துளை போட்டான் -அந்தப்
போக்கிற்கு மதமெதற்குக் காட்டான் -குணம்
எத்தனைதான் நீதிநெறி
எடுத்துரைத்தப் போதுமந்த
இழிபிறவி திருந்திவர மாட்டான் -இவன்
எவ்விடத்தும் வெறிபிடித்தக் கோட்டான்!

மூடியில்லா விளக்கெடுத்து மூழ்கி –ஒளி
முத்தெடுக்க முடிந்திடுமோ கேள்வி –தினம்
தேடுவதும் ஓடுவதும்
தேவனருள் வேட்கையெனில்
பாடுவதேன் போர்ப்பரணிப் பாட்டு? –எந்தப்
பரம்விரும்பும் உயிரழிக்கும் வேட்டு?


பாத்தென்றல் முருகடியான்