வெள்ளி, 28 மே, 2010

விடியலுக்கு வழி!


எழுகதிர் தென்மொழி படி! –இனி
எழுந்திடும் உன்தமிழ்க் குடி!
விழுகதி ராதமிழ்க் கொடி? –தமிழ்
விளைவழிப் பார்கதை முடி!

தனித்தமிழ்ப் போர்கலன் எடு! –வரும்
தமிங்கல இதழ்களைச் சுடு!
அணித்தமிழ் அறவிதை நடு! –வட
ஆரியச் சூழ்ச்சியைக் கெடு!

திராவிடம் தமிழுக்கு மறு! –சில
திருடரின் தன்னலக் கரு!
இராதினி எதிரிக்கும் எரு! –என
எழுதிடு தென்மறத் திரு!

இருகை வேழத்தின் நடை! –தமிழ்
இழந்ததை ஈட்டிடும் படை!
ஒருகை பார்பகை உடை! –தமிழ்
உனக்களப் பாள்பெருங் கொடை!

அரைகுறை உடைகளில் படம்! –அதில்
ஆங்கில வடமொழித் தடம்!
துறைபல அயலவர் இடம்! –தமிழ்
தூக்குவார் கால்களோ முடம்!

பதவிகள் பணத்திலே குறி! –தமிழ்
பாழ்படச் செய்பவர் நரி!
சிதறிய செந்தமிழ் நெறி! –தனைச்
சேர்க்குமீ ரிதழ்களே விரி!

பாத்தென்றல் முருகடியான்!

புதன், 23 செப்டம்பர், 2009

சிவம்!

அன்பு சிவம்!
அறிவு சிவம்!
ஆண்டவனும் சிவம்!
நம்பி நம்பி
வணங்கி வந்தால்
நம்மைக் காக்கும் சிவம்!
நல்ல சிவம்!
வெல்ல சிவம்!
உள்ள தெய்வம் சிவம்!
சொல்லிச் சொல்லி
வணங்கி வந்தால்
காக்கும் சதாசிவம்!

பாத்தென்றல் முருகடியான்

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

சக்தி!

ஓம் சக்தி
ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்!
நாம் சக்தி
நாம் சக்தி
நாம் சக்தி நாம்!

அன்னை சக்தி
அன்பு சக்தி
அறிவு சக்தி ஆம்!
உன்னைக் காக்கும்
என்னைக் காக்கும்
உலகைக் காக்கும் ஆம்!

காளி சக்தி
மாரி சக்தி
கடவுள் சக்தி ஓம்!
கடலும் சக்தி
மலையும் சக்தி
மழையும் சக்தி ஓம்!

தாயும் சக்தி
தங்கை சக்தி
தருமம் சக்தி ஓம்!
நீயும் சக்தி
வணங்க வேண்டும்
சக்தி சக்தி ஓம்!

பாத்தென்றல் முருகடியான்

வியாழன், 17 செப்டம்பர், 2009

முருகா!



முருகா! முருகா! முருகா!
மயிலில் வருவாய் முருகா!
மாம்பழம் தருவேன் முருகா!
மலர்களைத் தருவேன் முருகா!
பால்கொண்டு படைப்பேன் முருகா!
வேல்கொண்டு வருவாய் முருகா!
சேவல் கொடியோய் முருகா!
காவல் புரிவாய் முருகா!
தெய்வம் நீயே முருகா!
தேவன் நீயே முருகா!
சக்தியின் மகனே முருகா!
பக்தியில் வருவாய் முருகா!

பாத்தென்றல் முருகடியான்

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

அகரம் அம்மா!


அம்மம்மா
காலையிலே
எழுந்தம்மா
ஆசைமுத்தம்
தருவாளே!
நம்மம்மா
இரவம்மா
நடந்துவிட்டால்
பகலம்மா!
ஈகாட்டிப்
பல்விளக்கு
நல்லம்மா!
உன்னம்மா
உனக்காகத்
தோசைசுட்டாள்!
ஊட்டிவிட்டாள்!
தலைசீவிப்
பின்னிவிட்டாள்!
ஐயம் வந்தால்
அப்பாவைக்
கேளம்மா!
ஒற்றுமையாய்க்
கொடி வணங்கிப்
பாடம்மா!
ஓடிப்பாடி
விளையாடி
ஆடம்மா!
ஔவை போல்
நம்பாட்டி
தேடிடுவாள்!
அம்மா அப்பா
தெய்வமெனக்
கூறிடுவாள்!

பாத்தென்றல் முருகடியான்

சனி, 12 செப்டம்பர், 2009

மாதங்கள்!

சித்திரை வந்தால் நெய்பூசு!
வைகாசி வந்தால் கைவீசு!

ஆனியில் ஆற்றினில் தோணிவிடு!
ஆடியில் நின்றுநீ பாடிவிடு!

ஆவணி மாதம் அத்தை வந்தாள்!
புரட்டாசி மாதம் திரும்பிச்சென்றாள்!

ஐப்பசி மாதம் காற்றடிக்கும்!
கார்த்திகை தீபம் ஒளிகொடுக்கும்!

மார்கழி மாதம் குளிரடிக்கும்!
தைதை நாட்டியம் கால்படிக்கும்!

மாசியில் ஊசியில் நூலைவிட்டாள்!
பங்குனி ஆண்டெனும் முட்டையிட்டாள்!

பாத்தென்றல் முருகடியான்

வியாழன், 10 செப்டம்பர், 2009

கிழமைகள்!

சூரியன் தானே
ஞாயிற்றுக் கிழமை!
சுற்றும் நிலவே
திங்கள் கிழமை!
தங்கை வாய்போல்
செவ்வாய்க் கிழமை!
தம்பி அறிவான்
புதன் கிழமை!
வெற்றி கொடுக்கும்
வியாழக் கிழமை!
வெள்ளி நிறமாம்
வெள்ளிக் கிழமை!
வாரத்தை முடிக்கும்
சனிக் கிழமை!
வரிசை படிப்பீர்
ஏழு கிழமை!

பாத்தென்றல் முருகடியான்