உலகப் படத்தில் ஒளிரும் புள்ளி!
உறுபசிப் பிணியை எரிக்கும் கொள்ளி!
புலமைப் புதுமைப் புலர்விடி வெள்ளி!
புகழ்பெற நலங்கள் தருவாள் அள்ளி!
சலனமில் லாநற் சமத்துவப் பள்ளி!
சட்டம் ஒழுங்கால் வலிவருள் நெல்லி!
வளந்தருஞ் சாங்கி துறைமுகச் செல்வி!
வணங்கிடு வோமவள் திருப்புகழ் சொல்லி!
கண்ணீர் வடித்தவள் அன்றொரு நாளால்
கட்டறுத் தெழுந்தவள் விடுதலை வாளால்
பன்னீர் தெளித்தவள் நன்னெறிக் கோளால்
பழிகளைத் துடைத்தவள் நான்கிரு தோளால்
புண்ணீர் அகற்றினாள் மதிஎனும் வேலால்
புதுநெறி அறிநெறி வகுத்தசெங் கோலாள்
திண்ணியக் கோணலை நிமிர்த்தினள் நூலால்
தென்கிழக் காசியத் தின்றிவள் மேலாள்!
ஆறுகள் ஏருழ அணிவயல் இல்லை
ஆயினும் இவளுடல் அருள்மணக் கொல்லை
வீறுகொள் கடலலை நாற்புற எல்லை
விலங்கியல் புள்ளியல் இன்பமோ கொள்ளை
சேறுகொள் நிலமிசை மனைவரும் ஒல்லை
சிறந்திடக் கண்டனர்ப் பனிமலைப் பிள்ளை
பேறுகொள் அவள்திருப் பெயரெனுஞ் சொல்லைப்
பேசினால் உள்ளொளி பிறக்குமா தொல்லை?
இன்றிவள் வயதொரு நாற்பதின் மூன்று
எழுந்தெடு நற்றுறை புகழ்ந்திடத் தோன்று
குன்றிவள் விளக்கெனக் குறள்வழி ஊன்று
குடிநலங் காப்பதில் இவள்பெருஞ் சான்று
நன்றுற நான்கின மதநிறந் தாண்டு
நாமெனும் நலம்வர இறைவனை வேண்டு
வென்றிட விடிவுற அறிவொளி தூண்டு
வெற்றியே விளைந்திட விளக்கிடும் ஆண்டு!
பாத்தென்றல் முருகடியான்.
சனி, 21 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக