கேட்டு வாங்கியும் போட்டு வாங்கியும்
கீழைமை பேசுதல் முறைதானா?
காட்டு மன்பினில் கயைப் பூசுதல்
கண்ணிய முடையார் செயல்தானா?
நட்ட நட்பினில் நஞ்சைக் கலப்பதா?
நல்லதைச் செய்திட முடியாதா?
உட்பகை யோடும் உறவு பேசுதல்
உயர்ந்தவர் நெஞ்சம் கடியாதா?
குட்டிச் சொல்வதும் தட்டிக் கேட்பதும்
நட்டவர்க் குரிய நயமாகும்
ஒட்டிப் பேசியே உறவைச் சாய்ப்பதால்
உமக்கும் எமக்குமெப் பயனாகும்?
முட்டியைத் தூக்கும் முனைப்புறு பேச்சால்
முகமும் அகமும் கெடுகிறதே
வெட்டுதல் எளிதே விளைவிப்ப தரிதே
வெண்மலர் நெஞ்சும் சுடுகிறதே
வஞ்சகச் சிரிப்பும் வாய்மொழிச் செழிப்பும்
அஞ்சனம் பூசுதல் அறியாமல்
தஞ்சமென் றிருக்கும் தண்மலர் மனத்தைத்
தடியா லடித்தபதுந் தகுமாமோ?
பொருளால் செய்யும் உதவியை மட்டும்
புகழ்ந்தே திரிவது புல்லறிவு
அருளால் மனமொழி அன்பால் உதவுதல்
ஆண்டவன் கொடுத்த நல்லறிவு!
நன்றியின் வித்து நல்வினை ஒழுகல்
நம்குற ளாசான் சொல்லாகும்
குன்றியின் முகம்போல் குறுகுளத் தார்க்குக்
கொடுத்தநன் மலரும் முள்ளாகும்
தானே வளர்த்த மேழத்தை அறுத்துத்
தானே உண்பதன் அருளாட்சி
வானே வருமென வாழ்பவர் செயலால்
வறியோர்ப் பயணமே இருளாச்சி!
கொண்டது விடாத குணங்குறி தொடாத
மண்டுகள் வாய்மொழி மந்திரமா?
கண்டுடன் கன்னலும் கடித்தால் சுவைதரும்
கருத்தறி யாருளம் எந்திரமா?
கூவி அழைத்ததும் குக்கலைப் போல்வரும்
ஆவியை வெகுள்வது அறியாமை
நீவிய விரல்களே நீள்விழி பாய்வது
நெருநல் கேளறம் புரியாமை!
பாத்தென்றல்.முருகடியான்
திங்கள், 2 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக