சனி, 11 ஏப்ரல், 2009

மாணவ மணிகாள்!

விடுதலை வேண்டி
விட்டில்க ளாகி
விளக்கைத் தேடும் கள்ளிகளா?
சுடுதலைப் பற்றிச்
சொரணைஇல் லாமல்
சுடலைக்குப் போகுஞ் சுள்ளிகளா?

பிஞ்சினில் பழுக்க
பஞ்சென நரைக்க
நெஞ்சினைத் தூக்கி நடப்பவரா?
நஞ்சென மாறும்
நடையுடை தேடும்
அஞ்சுதற் கஞ்சா மடப்பதரா?

படிக்கும் நாளில்
குடிக்குங் கோளில்
பிடிக்கும் புகைக்கும் அடிமைகளா?
நொடிக்குள் மாறும்
நுண்ணறி வுலகில்
முடிக்குள் நாளொரு பொடிமைகளா?

நாணங் கொள்வது
நன்னெறி செல்வது
வானம் சேர்த்திடும் வாலறிவு!
ஊனம் பாரதி
உரைத்தா னென்பது
ஞானம் பெறாரின் நூலறிவு!

கசடறக் கற்று
கனியென முற்று
காலம் கண்முன் பொன்னாகும்!
இசைபட வாழ
இன்னலஞ் சூழ
எண்ணும் எழுத்தும் கண்ணாகும்!

பெற்றோர் சொல்லை
தட்டுதல் முள்ளில்
பட்டது போன்ற துயர்நேரும்!
குற்ற மிழைக்கும்
குண்டரின் குழுவைப்
பற்றுதல் தீராப் பழிசேரும்!

ஆயிரம் மணிகள்
ஆகில மிருந்தும்
வாயுரை மணிகள் மாணவரே!
பாயிரம் பெற்றோர்
பயிற்றிடும் ஆசான்
பயன்மொழி நடந்தால் தேனவரே!

பாத்தென்றல்.முருகடியான்

திங்கள், 6 ஏப்ரல், 2009

வேண்டுகோல்!

அக்கினிக் குஞ்சுதான்
என்றிருக்காதே
அடர்கா டழிக்கும்
மறக்காதே!

எக்கனி பறிக்கலாம்
என்றறியாமல்
எட்டியைப் பறித்திட
எண்ணாதே!

பாலொடு நீரைக்
கலப்பதனால்,எப்
பழுதுறும் என்று
கேட்பார்கள்!

வாலறி வில்லாப்
பறவைஅதனை
வகைபிரித் துண்ணும்!
வழுவெண்ணும்!

தெரியா திருப்போர்
செய்பிழை பொறுப்போம்
தெரிந்தே செய்மனம்
எதையெண்ணும்?

நாளொரு சொல்லை
நாமிழக் கின்றோம்
நாடகம் ஊடகம்
தமிழில்லை!

நாலடி ஏறினால்
ஐந்தடி சறுக்கி
நலிவடை வோம்மொழி
எலும்புறுக்கி!

வகைவகைக் குருதி
வாழ்வதிவ் வுடலி
புகமுடி யாப்பிற
அணுப்பகுதி!

தொகைமிகுந் தமிழ்த்தேன்
தொட்டிலிற் பிறசொற்
புகப்புகப் போகும்
தமிழுயிரி!

வெற்றிலைப் பாக்கும்
சுண்ணமும் சேர்த்தால்
மற்றொரு நிறமாய்
மாறிவிடும்!

உற்றிதை நோக்கு
உன்றமிழ் மொழியும்
மற்றொரு கலப்பால்
வேருங்கெடும்!

அருகிப் போச்சு
அருந்தமிழ்ப் பெயர்கள்
அன்புடன் எண்ணிட
வேண்டுகிறேன்!

பெருகிப் போகும்
பிறசொல் நீக்கிப்
பேசிட எழுதிடத்
தூண்டுகிறேன்!

பாத்தென்றல்.முருகடியான்