சனி, 29 ஆகஸ்ட், 2009

சூரியன்!

காலையில் வருவான் சூரியன்!
கடல்மேல் வருவான் சூரியன்!
மாலையில் மறைவான் சூரியன்!
மலையினில் மறைவான் சூரியன்!

கடலைச் சுடுவான் சூரியன்!
மழையைத் தருவான் சூரியன்!
நாளும் வருவான் சூரியன்!
நம்மைக் காப்பான் சூரியன்!

பாத்தென்றல் முருகடியான்

புதன், 26 ஆகஸ்ட், 2009

குருவி!

சின்னக் குருவி!
சிட்டுக் குருவி!
துள்ளிப் பறக்கும்!
நல்ல குருவி!

பச்சைக் குருவி!
பாடும் குருவி!
கீச்சுக் கீச்சென்று
கத்தும் குருவி!

மரத்தில் இருக்கும்
மஞ்சள் குருவி!
துரத்திப் பிடித்தால்
பறக்கும் குருவி!

வண்ணக் குருவி
வம்பு செய்யாது
தின்னக் கொடுத்தால்
தேடும் குருவி!

பாத்தென்றல் முருகடியான்

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

பூமலை!


பச்சைமலை பசுமலை!
பாட்டுப் பாடும் குயில்மலை!
கீச்சுக் கீச்சுக் குயில்கள்
கிளையில் தாவும் திருமலை!

தாமரைப்பூக் குளத்திலே
தவளை நீந்தும் பூமலை!
பூமரத்தின் அடியினில்
புல்நிறைந்த பூமலை!

பூக்கள் பூக்கும் பூமலை!
பொழுது போக்கும் பூமலை!
காக்கை கத்தும் பூமலை!
காண வேண்டும் பூமலை!

பாத்தென்றல் முருகடியான்

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

கைவீசு!


கைவீ சம்மா! கைவீசு!
கண்ணே! கனியே! கைவீசு!
கைவீ சம்மா! கைவீசு!
காலையில் எழுந்து கைவீசு!

பூவே! பூவே! கைவீசு!
பொய்சொல் லாதே! கைவீசு!
பொன்னே! மணியே! கைவீசு!
போட்டிப் போட்டுக் கைவீசு!

நடக்க நடக்க கைவீசு!
நாளும் நாளும் கைவீசு!
அடுக்கு விரலால் கைவீசு!
அன்பைக் காட்டிக் கைவீசு!

பாத்தென்றல் முருகடியான்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

கொடி பறக்குது!

ஆடி ஆடிப் பறக்குது!
அசைந்து அசைந்து பறக்குது!
கம்பத்திலே பறக்குது!
காற்றில் ஆடிப் பறக்குது!

நிலவைத் தூக்கிப் பறக்குது!
நீண்ட கொடியும் பறக்குது!
சிவப்பு வெள்ளை நிறத்திலே
சிங்கைக் கொடியும் பறக்குது!

பாத்தென்றல் முருகடியான்

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

எம். ஆர். டி!


பயணம் போகும் எம்.ஆர்.டி!
பாட்டி போகும் எம்.ஆர்.டி!
பாம்பைப் போலும் வளைந்தோடிப்
பறந்தே போகும் எம்.ஆர்.டி!

கம்பியில் ஓடும் எம்.ஆர்.டி!
கரண்டால் ஓடும் எம்.ஆர்.டி!
தம்பியும் நானும் அப்பாவும்
தம்பினிஸ் போகும் எம்.ஆர்.டி!

நீருள் ஓடும் எம்.ஆர்.டி!
நிலத்துள் ஓடும் எம்.ஆர்.டி!
சீறிப் போகும் எம்.ஆர்.டி!
சிங்கப் பூரின் எம்.ஆர்.டி!

குப்பைப் போடக் கூடாது
கோபம் கொள்ளும் எம்.ஆர்.டி!
அப்பா கையைப் பிடித்தால்தான்
அழகாய்ப் போகும் எம்.ஆர்.டி!

பாத்தென்றல் முருகடியான்

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

ஆனை!


ஆனை யைப்பார் ஆனை!
அம்மா! பெரிய யானை!
கன்னங் கரிய யானை!
கால்கள் பெருத்த யானை!

கொம்பு முளைத்த யானை!
கோவிலில் நிற்கும் யானை!
விலங்குத் தோட்ட யானை!
வித்தைக் காட்டும் யானை!

கரும்பு கேட்கும் யானை!
காது பெருத்த யானை!
தும்பிக் கையால் நம்மைத்
தொட்டுப் பார்க்கும் யானை!

பாத்தென்றல் முருகடியான்

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

மணி ஓசை!

டிங்டாங் டிங்டாங் மணியோசை!
டிங்டாங் டிங்டாங் மணியோசை!
‘ச்சிங்சோங்’ வீட்டு மணியோசை!
‘செந்தில்’ வீட்டு மணியோசை!

கிணிகிணி கிணிகிணி மணியோசை!
கடிகாரம் ஒலிக்கும் மணியோசை!
திருடரைப் பிடிக்கும் மணியோசை!
தீயை அணைக்கும் மணியோசை!

கோயிலில் கேட்கும் மணியோசை!
குமரன் சிரிப்பது மணியோசை!
காலையில் எழுப்பும் மணியோசை
கடவுள் ஓசை மணியோசை!

பாத்தென்றல் முருகடியான்

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

பிள்ளைப் பூக்கள்!

பூக்கள் நீங்கள் பிள்ளைகள்!
புன்னகை நிலவின் வில்லைகள்!
காக்கும் விடியல் காலைகள்!
கலைப்பைப் போக்கும் சோலைகள்!

(பூக்கள்…)

அன்பு சுரக்கும் நீரூற்று!
அணைத்துத் தவழும் இளங்காற்று!
இன்பம் விளைக்கும் புதுப்பாட்டு!
இறைவன் பாடும் தாலாட்டு!

(பூக்கள்…)

தத்தி நடக்கும் தாமரை!
தத்துவம் சொல்லும் பொதுமறை!
சத்தியம் பூக்கும் செடிகளே!
சந்தனக் குங்குமப் பொடிகளே!

(பூக்கள்…)

சிறகு முளைக்கும் கிளிகளே!
சிங்கைத் தாயின் விழிகளே!
உறவைப் பாடும் குயில்களே!
ஓடி ஆடும் மயில்களே!

(பூக்கள்…)
பாத்தென்றல் முருகடியான்