புதன், 20 ஆகஸ்ட், 2008

பொய்யடா பொய்யடா பொய்!

ஆணவக் காற்றை அடைத்துக் கிடப்பதனால்
நாணச் சுரப்பி நரம்பறுப்பால் -வான(ம்)வரை
உய்யடா என்றே உதைத்தாலும் பந்தனையர்
பொய்யடா பொய்யடா பொய்!

ஓட்டைக் குடநீர் ஒழுகிக் குறையவில்லை
ஏட்டில் எழுத்தாய் இருப்பதுபோல் -காட்டித்தன்
மெய்யை நிலைநாட்டி மெய்யை அழிக்குமுயிர்
பொய்யடா பொய்யடா பொய்!

அச்சம் அருள்நன்றி ஆக்கிய ஆண்டவனை
மெச்சிப் புனைகதையால் மேம்படுத்தி -உச்சவரைப்
பொய்ச்சேர வைத்த புலமை அனைத்துமிங்கே
பொய்யடா பொய்யடா பொய்!

கண்ணாடி வேலியிட்டுக் காத்தாலும் நெய்விளக்கம்
உண்ணாடிக் காற்றின்றி ஓய்ந்துவிடும் -மின்னோடி
வெய்யனொளிப் பாய்ச்சும் விளக்கில் வளிப்புகுந்தால்
பொய்யடா பொய்யடா பொய்!

தேடிப் பொருள்சேர்த்துத் தேவைஎல் லாந்தீர்த்துக்
கூடிக் களிக்கும் குடும்பநிலை -வாடிக்கை
நெய்யற்றால் மாயும் விளக்கும் உறவுகளும்
பொய்யடா பொய்யடா பொய்!

தன்மானம் போற்றித் தமிழ்மானம் விட்டுயர்தல்
பொன்வானைச் சேர்புள்ளின் பொய்த்தோற்றம் -நன்மானம்
தெய்வத் தமிழ்க்காப்பே தேடும் பிறவனைத்தும்
பொய்யடா பொய்யடா பொய்!

பாத்தென்றல்.முருகடியான்

சனி, 16 ஆகஸ்ட், 2008

மெய்யடா மெய்யடா மெய்!

தங்கத் தமிழ்திருடித் தம்மொழிபோல் மாற்றியதும்
பொங்கல்புத் தாண்டழிக்கும் பொய்யுரையால் -தங்கருத்தை
மெய்யாக்கி னாரென்ற மெய்யறிஞர் வாணரின்*சொல்
மெய்யடா மெய்யடா மெய்!

பன்றியுடன் சேர்ந்த பசுவின் கதையாகிக்
குன்றிக் குலமழிக்கும் கோடறியாய் -இன்றும்நாம்
தெய்வத் திருப்பெயரால் தேட்டம் இழப்பதெல்லாம்
மெய்யடா மெய்யடா மெய்!

ஒன்றே குலமென்(று) உயர்ந்த மரபணுவில்
நன்றே புரிவதுபோல் நஞ்சேற்றி -இன்றுவரை
உய்வாரை நீங்க உரைத்தத் திருக்குறளே
மெய்யடா மெய்யடா மெய்!

கண்டாலும் கேட்டாலும் கள்ளுண்ட போதைத்தரும்
பெண்டிற் பெருஞ்சிறப்பே பேரின்பம் -என்றிருக்கும்
மெய்யைப் புறமொதுக்கி மெய்யறிவுப் பெற்றவர்சொல்
மெய்யடா மெய்யடா மெய்!

தற்புகழ்ச்சிப் பேசித் தருக்கித் திரிவார்முன்
பொற்புகழ்ச்சிச் சொன்னால் புரிந்திடுமா? -நற்புகழைச்
செய்யடா செய்கவெனச் செப்புவதால் தீங்குவரல்
மெய்யடா மெய்யடா மெய்!

வாணர்* -தேவநேயப் பாவாணர்

பாத்தென்றல்.முருகடியான்

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2008

இட்டவடி நோவும் இவர்க்கு!

கையளவில் தைத்தவுடை; கற்பறையின் வாய்மூட
நெய்யளந்த வாழை நெடுந்தூணால் -பையநலங்
கெட்டால் துடிக்காத கீழ்மை மகளி(ர்)மனை
இட்டவடி நோவும் இவர்க்கு!

பட்டஅடி நூறு படப்போவ தைநூறு
சுட்டவடுக் கண்டால் சுடுநெருப்பின் -பட்டறிவு
விட்டு விடாதென்றும் வெல்லறிவார் முன்வஞ்சம்
இட்டவடி நோவும் இவர்க்கு!

நாணத்தோ டிட்ட நறுந்தா மரையடியும்
மானத்தைப் போற்றும் மரபடியும் -தேனொத்துத்
திட்டமிடத் தெரிந்த திருமக்கள் மேல்துன்பம்
இட்டவடி நோவும் இவர்க்கு!

அன்பே!என் ஆருயிரே! ஆற்றல் மிகுந்தோழா!
முன்பேநம் மொழிந்ததையே -பின்பொருவன்
தட்டேந்தச் சொல்லித் தருவான் அதையுண்பான்
இட்டவடி நோவும் இவர்க்கு!

உள்ளதைக் கொண்டுண் டொழுங்குடன் வாழாமல்
அல்லதைத் தேடி அலைவார்!கால் -முள்ளாகிப்
பட்டவிட மெல்லாம் பழுதாகும் அக்கயவர்
இட்டவடி நோவும் இவர்க்கு!

முயலுக்குக் கால்மூன்று முட்டாளுக் கேழறிவு
கயலுக்குக் கால்தேடிக் காட்டுவார்! -செயலூக்கிச்
சுட்டெடுக்குஞ் சூதர் சுருட்டுப் புகைவிடுவார்
இட்டவடி நோவும் இவர்க்கு!

பாத்தென்றல்.முருகடியான்.