வெள்ளி, 28 மே, 2010

விடியலுக்கு வழி!


எழுகதிர் தென்மொழி படி! –இனி
எழுந்திடும் உன்தமிழ்க் குடி!
விழுகதி ராதமிழ்க் கொடி? –தமிழ்
விளைவழிப் பார்கதை முடி!

தனித்தமிழ்ப் போர்கலன் எடு! –வரும்
தமிங்கல இதழ்களைச் சுடு!
அணித்தமிழ் அறவிதை நடு! –வட
ஆரியச் சூழ்ச்சியைக் கெடு!

திராவிடம் தமிழுக்கு மறு! –சில
திருடரின் தன்னலக் கரு!
இராதினி எதிரிக்கும் எரு! –என
எழுதிடு தென்மறத் திரு!

இருகை வேழத்தின் நடை! –தமிழ்
இழந்ததை ஈட்டிடும் படை!
ஒருகை பார்பகை உடை! –தமிழ்
உனக்களப் பாள்பெருங் கொடை!

அரைகுறை உடைகளில் படம்! –அதில்
ஆங்கில வடமொழித் தடம்!
துறைபல அயலவர் இடம்! –தமிழ்
தூக்குவார் கால்களோ முடம்!

பதவிகள் பணத்திலே குறி! –தமிழ்
பாழ்படச் செய்பவர் நரி!
சிதறிய செந்தமிழ் நெறி! –தனைச்
சேர்க்குமீ ரிதழ்களே விரி!

பாத்தென்றல் முருகடியான்!

கருத்துகள் இல்லை: