அங்கம் பொறுக்கிடும் அரக்கக் கொடுமை!
சிப்பிகள் பொறுக்கிய நெய்தற் கரையில்
உப்பிய உடல்கள் சிப்பிக ளாச்சே!
உப்புக் கண்டம் மீனவர் போட்டார்
உப்பியப் பிண்டம் கடல்தாய் போட்டாள்
முத்துக் குளிக்க மூழ்கிய கடலில்
செத்தவர் வாயில் சிதறிய பற்கள்
குன்றும் முள்ளும் குவளை மலரும்
மண்டி இருந்த மணற்பரப் பெல்லாம்
பெண்டு பிள்ளை பிஞ்சும் பூவும்
நண்டுகள் ஓடாய் நைந்து கிடந்தன
நீரலை ஏறி நீந்திய மாந்தரைப்
பேரலை ஏறிப் பிணமாக் கியதே!
அடிதாங் காமல் அலறிய ஆழி
படிதாண் டியதால் பட்டது வையம்!
ஈரக் கடலில் இத்தனை நெருப்பா?
கூரை பிடுங்கிடும் எருமைப் பிறப்பா?
வெள்ளிச் சிரிப்பால் விழுங்கிய கடலால்
வெள்ளுடை ப+ண்டன தமிழச்சி உடல்கள்
தாயை இழந்த தளிர்களின் ஓலம்
சேயை இழந்த தாயழுங் காலம்
தந்தது எதுவோ? தலைவரும் யாரோ?
இந்த நிலைக்கு எவனோ? சிவனோ?ட
ஏசு பிறந்த மறுநா ளிந்தக்
காசு பிறக்கக் காரண மென்ன?
வாடிய பயிரால் வாடிய மாந்தன்
ஆடிய மண்ணில் ஆழியின் ஆட்டம்!
மழைகொடுப் பவளே மரணம் கொடுப்பதா?
பிழைபொறுப் பவளே பிழைகள் செய்வதா?
குமரியைக் குடித்த கொடிய வளே!நீ
அமரிட வந்தாய் அறமுனக் கில்லை!
ஏவிய தெதுவோ? ஏவரற மொழியோ?
பாவிநீ கடலே! பழிபுரிந் தாயே!
கிழித்தால் மீண்டும் ஆக்கிடு வாயா?
மழித்தால் முளைக்கும் மயிரா உயிர்கள்?
மொழித்தாய் தோன்றிய முதல்நி லத்தை
இழித்தாய் கடல்நீ! இயற்கையு மில்லை!
கட்டு மரங்கள் மிதப்பதைப் போன்று
கட்டுடல் மாந்தர் கட்டா மரங்களா?
நெஞ்சைக் கசக்கிப் பிழிந்த நிகழ்வு
துஞ்சிய மக்களைத் துடைத்தநீ ரிழிவு!
மீன்களை நாங்கள் உண்டதற் காக
மீன்களுக் கெம்மை இரையிட் டாயோ?
தண்மை இருந்தும் தாய்மன மில்லாப்
பெண்மை நீயெனப் பேசிட வைத்தாய்!
கண்மை தீட்டிடக் கணவாய்ப் பிடிப்போம்
வன்மைத் தமிழினம் வளரும்
உண்மை இதையிவ் வுலகம் உணருமே!
பாத்தென்றல்.முருகடியான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக