சனி, 20 ஜூன், 2009

முடிச்சி!

காந்தக் கயிற்றில் தொங்கிடுங் கோள்கள்
ககனம் மிதந்திடும் கோள்களே!
கூந்தலை வளர்த்திடும் கோதையர் இடுவதும்
குடைபோல் வடைபோல் முடிச்சுகளே!

மூட்டுகள் எனும்பல முடிச்சிகள் போட்டதில்
ஊட்டினார் உயிர்வளி ஆண்டவனார்
பூட்டிய முடிச்சுகள் அவழ்ந்திட வலிவிழுந்து
போய்விடும் மாந்தரின் தாண்டவவேர்!

தனித்தனித் தாள்களை ஊசிநூ லிட்டதைக்
கோர்த்து முடிச்சிட நூலாகும்!
இனித்திடும் தமிழினில் தளையொரு முடிச்சென
இருந்திடத் தமிழ்க்கவி வேலாகும்!

ஆண்முடிச் சென்பது படிந்திடும் முடிச்சுகள்
பெண்முடிச் சென்பது படியாது!
வீண்முடிச் சென்பது மொட்டைத் தலையுடன்
முழங்கால் இணைவது முடியாது!

மாலை முடிச்சினை மலைப்பென் பாரெழில்
மலர்களைத் தொடுத்திடுந் தோரத்தால்
கூளைக் கனுப்பிடுஞ் சுருக்கெனும் முடிச்சினால்
சுருண்டன உயிர்பல காரணத்தால்!

இழையில் விழுந்திடும் முடிச்சினைப் பிரித்திடல்
எளிதென நினைப்பது தவறாகும்
பிழையெனும் முடிச்சுகள் வாழ்வுறும் மறந்திட
முடிந்தால் வாழ்விதே தவமாகும்!

பாட்டிகள் முந்தானை முடிச்சினில் இருந்தன
பணத்துடன் சாபமும் அக்காலம்
வேட்டிகள் சேலையில் முடிச்சதும் ஆண்களை
வீழ்த்திட நினைப்பதே இக்காலம்!

ஆயிர மாயிரம் கண்களைக் கொள்வது
அங்கயல் வலைபெறும் முடிச்சால்தான்
ஓய்வுறும் வரைவரும் மாந்தரின் வாழ்வினில்
உயர்வுகள் உறவேனும் முடிச்சால்தான்!

முடிச்சுகள் இல்லாத உடையோ போருளோ
மூதுல கெங்குமே கிடையாது
பிடிப்புடன் இருந்தஅத் தொப்பூழ்க் கொடியற
முடிச்சிட விலையெனில் உயிரேது?

தூண்டிலும் கயிறும் முடிச்சிடா திருந்தால்
வேண்டிய மீன்களைப் பெறுபவர்யார்?
ஆண்டியின் வயிறுறும் அரும்பசிக் குணவிடும்
முடிச்சறுந் தாலுயிர் தருபவர்யார்?

நாற்று முடிச்சுகள் வயல்களில் பிரித்திடச்
சோற்று முடிச்சுகள் உருவாகும்
காற்றை முடிச்சிடக் கற்றவர் சொற்களே
கடவுளைக் காட்டிடுந் திருவாகும்!

இஸ்த்திரி தமிழுடன் இணைத்திடும் முடிச்சினால்
எந்தமிழ்த் தீய்ந்தே கரியாச்சு
அத்திரி கருகம் முடிச்சறிந் தார்க்கே
அறிவின் கதிரொளி விரிவாச்சு!


பாத்தென்றல் முருகடியான்

கருத்துகள் இல்லை: