வெள்ளி, 5 ஜூன், 2009

விரலைக் குத்தி!

ஒருவிரலை ஊசிகொண்டு குத்து -வரும்
உதிரமாதல் கவியெழுதிக் கொத்து –மதப்
பெருவிரலை வெட்டியெடு
பேதமையைச் சுட்டுவிடு
கருவறைக்குள் புதுக்கருவைப் பாய்ச்சு –அந்தக்
காலத்தில்தான் அமைதிக்கதிர் வீச்சு!

மனிதனுக்காய் மதமிருந்தால் நன்மை –அந்த
மதத்துக்காய் மனிதனெனல் புன்மை –நாளும்
இனியதற்குச் சண்டையிட்டு
எரிவதிலும் சரிவதிலும்
இல்லையடா ஆறறிவின் மேன்மை –மதம்
ஏறியவர்க் கெங்கிருக்கோ ஆண்மை?

வன்செயலால் வளர்த்துவிட்ட எதுவும் -மறு
வன்செயலால் பின்னொருநாள் சிதையும் -நேற்று
அண்ணனெனத் தம்பியென
அறையிருந்து பிறந்தவர்கள்
மண்ணையள்ளிப் போட்டுக்கொள்ள மதமா? –அன்றி
மண்டையோட்டில் குண்டுபோடும் வதமா?

கால்வயிற்றை நிரப்பவில்லைச் சோறு –மதக்
காடுகளை வளர்ப்பதென்ன பேறு? -இதில்
மேல்வகுப்புக் கீழ்வகுப்பு
நூல்பகுப்புச் செய்ததனால்
பால்கிடைக்காப் பிள்ளைபல நூறு -இந்தப்
பாவத்துக்கு விதைகள்மதச் சேறு!

புத்தனுக்கே மார்பில்துளை போட்டான் -அந்தப்
போக்கிற்கு மதமெதற்குக் காட்டான் -குணம்
எத்தனைதான் நீதிநெறி
எடுத்துரைத்தப் போதுமந்த
இழிபிறவி திருந்திவர மாட்டான் -இவன்
எவ்விடத்தும் வெறிபிடித்தக் கோட்டான்!

மூடியில்லா விளக்கெடுத்து மூழ்கி –ஒளி
முத்தெடுக்க முடிந்திடுமோ கேள்வி –தினம்
தேடுவதும் ஓடுவதும்
தேவனருள் வேட்கையெனில்
பாடுவதேன் போர்ப்பரணிப் பாட்டு? –எந்தப்
பரம்விரும்பும் உயிரழிக்கும் வேட்டு?


பாத்தென்றல் முருகடியான்

கருத்துகள் இல்லை: