சனி, 30 மே, 2009

விளக்குமரம்!

கண்ணீர்த் துளிகளில் நட்டமரம் -இது
காய்க்கா தெனக்கை விட்டமரம் -புயல்
காற்றில் வெயிலில் வேரறுந் திடாமல்
காவியம் படைத்திடும் ஆலமரம்! –சிங்கை
விடுதலை விளக்குமரம்! –தமிழ்
விருந்திடப் பழுத்தமரம்!

ஒவ்வோ ராண்டிலும் மின்னுகிறாள் -மன
உறுதியோ டுயர்வினை எண்ணுகிறாள் -வரும்
எவ்வர வாயினும் இனித்திடப் பிணைப்பதில்
இறைவன் திருநெறி நண்ணுகிறாள் -சிங்கை
விடுதலை விளக்குமரம் -நல
விருந்திடு வேலமரம்!

நன்றியைப் போற்றிடுந் தென்னைமரம் -பால்
நிறமலர் தூவிடும் புன்னைமரம் -புவி
எண்டிசை ஏற்றிடும் எழிலர சாட்சியில்
இந்திரக் கற்பக மானமரம் -சிங்கை
விடுதலை விளக்குமரம் -தமிழ்
விருந்திடும் வாழைமரம்!

பலவகைப் பறவைகள் வந்திறங்க –தன்
பசுந்தலை வீடெனத் தந்தமரம் -எது
நல்வினை தீவினை நவின்றிடும் நூலென
வெண்ணிறக் கோடிட் டறுத்தமரம் -சிங்கை
விடுதலை விளக்குமரம் -பால்
வடித்திடும் நொய்வமரம்!

செம்மீன் விழுங்கிய சிறுமீன்கள் -துயர்
செய்தி அறிந்ததிக் கட்டுமரம் -பகை
எம்மீன் வடிவிலும் இங்குற நேர்ந்திடின்
இவளே கசந்திடும் எட்டிமரம் -சிங்கை
விடுதலை விளக்குமரம் -அடி
வேரிலும் பழுக்கும்மரம்!

சந்தன மரம்போல் தேய்ந்திடுவாள் -கடற்
சங்கறுப் பாரையும் காய்ந்திடுவாள் -கொடுஞ்
சிந்தனை யாளரின் செயலறிந் தாலிவள்
பந்த மறுத்திடும் தூக்குமரம் -புகழ்
வளர்த்திடுஞ் சிலுவைமரம் -மதில்
வேலிக்குக் கிளுவைமரம்!

ஓங்கி வளர்வதில் பாக்குமரம் -மற
உறுதியில் உழைப்பதில் தேக்குமரம் -துயர்
தேங்கிய இதயத்தை தேவனின் காலிட்டுத்
திருத்திடக் கனிதரும் குரந்தைமரம் -சிங்கை
விடுதலை விளக்குமரம் -தமிழ்
விருந்திடப் பழுக்குமரம்!

தூங்காத் துணிவினில் வேங்கைமரம் -தொழில்
துறையில் வளர்ச்சியில் வாகைமரம் -அறந்
தாங்கிய தத்துவ மொழிகளைத் தலைகளில்
தவழ்ந்திட அசைந்திடும் கொடியின்மரம் -சிங்கை
விடுதலை விளக்குமரம் -தமிழ்
விருந்திடப் பழுக்குமரம்!

முதுகுத் தண்டெனும் மரமேறி –ஒளி
மூளைக்கு வந்தபின் கொடிஏற்றம் -பொது
விதிகளை மீறுதல் வெம்மொழி கூறுதல்
வேண்டாம் விளக்கற இருள்வாட்டும் -சிங்கை
விடுதலை விளக்குமரம் -தமிழ்
விருந்திடப் பழுக்குமரம்!

கனியுடன் நிழல்தரும் மரங்களைப்பார் –புகைக்
காற்றுடன் அமிலத்தை மாற்றுவதார்? –தவ
முனியென வானிடம் மiழைவரங் கேட்பதை
மனிதா உன்மனம் எண்ணிடத்தான் -சிங்கை
விடுதலை விளக்குமரம் -தமிழ்
விருந்திடப் பழுக்கும்மரம்!


பாத்தென்றல் முருகடியான்

கருத்துகள் இல்லை: