வெள்ளி, 10 ஜூலை, 2009

குழந்தை!


நொச்சிக் கொழுந்து காலாட்டி
நூறு தாமரை முகங்காட்டி
உச்சி முகர்ந்தும் உவந்தேற்றி
உலகம் வணங்கும் உயர்தெய்வம்!

மணிவா சகத்தை வென்றெடுக்கும்
மழலை வாசகம் தேனளிக்கும்
கனிவாய்க் கன்னியர் முத்தமதை
கடைவாய்ச் சொல்லால் தோற்கடிக்கும்!

மற்போர் வீரர் மன்னவரின்
மார்பில் உதைக்கும் மாவீரன்!
சொற்போர் நிகழ்த்தி வெல்வாரும்
சுருள்வார் குழந்தை வாய்மொழிக்கே!

தத்தி நடப்பதில் ஓரின்பம்
தத்தை மொழிமற் றோரின்பம்
பொத்தி அணைத்திடப் புத்தின்பம்
புன்னகை தரும்பொன் னுலகின்பம்!

மலரும் பூக்கள் வாடிவிடும்
மண்தொட மழைநீர் தூய்மைக்கெடும்!
புலரும் பொழுதில் நிலம்போலுன்
பூவுடல் வாடா ஆடகப்பொன்!

தாத்தா தாத்தா என்றென்னைத்
தாவிடும் போதில் நானுன்னைப்
பார்த்தால் பரம்பொருள் தெரிகிறதே!
பாவச் சுமைகள் குறைகிறதே!

முதுமைக் கால நோய்நீக்கும்
மூலிகைத் தென்றல் உன்வரவே!
இதுவரைக் கவிஞர் எழுதாத
இறைவனின் கவிதை குழந்தைகளே!

பாத்தென்றல் முருகடியான்

1 கருத்து:

அண்ணாமலை..!! சொன்னது…

அருமையான வரிகள்..!!