ஞாயிறு, 24 மே, 2009

தமிழா! தமிழில் பேசு!

அச்சன் படைத்த அருந்தமிழ்த்தேன்
அள்ளி அருந்த முடியாமல்
எச்சம் விரும்பும் இழிந்தவராய்
இன்னும் தமிழா! நீயிருந்தால்
மெச்சிடு வாரோ நம்மினத்தை?
மேன்மைத் தமிழ்த்தாய் நிலைப்பாளா?
உச்சித் திலக உணர்வடைய
உண்மைத் தமிழா தமிழ்பேசு!

உலகைக் கொஞ்சம் விழித்துப்பார்
உன்தாய்க் கிளை மொழியெல்லாம்
பலகலை பயிலும் நாளிந்தாள் பண்டே
உடையாள் தமிழ்ப்பெண்ணாள்
அலகிடச் செய்தாள் ஆயிமித்தாய்
ஆரியம் ஆங்கிலத் தார்தேய்த்தார்
இலகிட இந்நாள் இந்நிந்நாள்
எழுவாய் தமிழா தமிழ்பேசு!

பெருமைத் தமிழெனப் பேசாதே
பின்னதைக் குப்பையில் வீசாதே
அருமை இலக்கிய அறநூல்கள்
அழிந்திட நீதுணைப் போகாதே!
வறுமை வேலை இவையெண்ணி
வாய்ப்பிடும் பிறமொழி படித்திடுக!
எருமை எம்மினம் இல்லையென
எண்ணிடத் தமிழா தமிழ்பேசு!

கொச்சக் கவிப்பா போலிங்கே
கொச்சைப் படுத்தும் ஊடகங்கள்
நச்சைக் கலக்கும் நாளிதழ்கள்
நமக்கேன் என்பதை உணர்ந்திடுக
கச்சை அணியாக் காரிகைபோல்
கண்ணிய மிழக்கும் தமிழ்வேண்டாம்
துச்சம் தமிழ்ப்பகை என்றிடுக
துணிந்தே தாய்த்தமிழ் பேசிடுக!

செல்லிடப் பேசி என்றொருசொல்
செய்தளித் தாரொரு தமிழ்க்கவிஞர்
நல்லிடந் தேடும் தமிழுணர்வு
நமக்கிருந் தாலது இனவுணர்வு
வெல்லத் தமிழில் பிறமொழியை
விரும்பிச் சேர்த்தேன் எழுதுகிறாய்?
இல்லை என்பார் தமிழ்மானம்
இருந்தால் தமிழா தமிழ்பேசு!

அவரவர் தாய்மொழி வளர்க்கின்றார்
அடிமை நீதமிழ் கெடுக்கின்றாய்
சுவரை இடித்ததில் ஓவியமா?
சூதறி யாத்தமிழ்க் கேவலமா?
தவறைச் சுட்டினால் எதிர்க்காதே
தமிழ்வய லில்களை வளர்க்காதே
உவர்நீர் குடித்திட நினைக்காதே
உண்மைத் தமிழா தமிழ்பேசு!

தாய்ப்பால் ஊட்டிக் காத்தவளை
தரணியில் முதன்முதல் பூத்தவளை
வாய்ப்பால் தமிழென வாய்த்தவளை
வண்ணம் சிந்தெனக் காய்த்தவளை
சேய்ப்போல் அறநூல் சேர்த்தவளை
செம்மொழி எனும்புகழ் பார்த்தவளை
ஏய்ப்பா ருடன்நீ சேராமல்
இதழ்ச்சுவை சேரத் தமிழ்பேசு!

அறிவியல் ஆயிரங் கைகளுடன்
ஆல்போல் தழைத்திடும் வையமிது
கருவிகள் கலைகளைக் கண்டறிவாய்
கனித்தமிழ் வாழ்ந்திட தொண்டுசெய்வாய்
திருவருள் கொடுத்தத் தேன்தமிழில்
தேடிடு கிடைக்கும் புதுச்சொற்கள்
மறுவற முகவரி நீகாட்ட
தமிழா தமிழில் பேசிடுக!



பாத்தென்றல் முருகடியான்

கருத்துகள் இல்லை: