சனி, 11 ஏப்ரல், 2009

மாணவ மணிகாள்!

விடுதலை வேண்டி
விட்டில்க ளாகி
விளக்கைத் தேடும் கள்ளிகளா?
சுடுதலைப் பற்றிச்
சொரணைஇல் லாமல்
சுடலைக்குப் போகுஞ் சுள்ளிகளா?

பிஞ்சினில் பழுக்க
பஞ்சென நரைக்க
நெஞ்சினைத் தூக்கி நடப்பவரா?
நஞ்சென மாறும்
நடையுடை தேடும்
அஞ்சுதற் கஞ்சா மடப்பதரா?

படிக்கும் நாளில்
குடிக்குங் கோளில்
பிடிக்கும் புகைக்கும் அடிமைகளா?
நொடிக்குள் மாறும்
நுண்ணறி வுலகில்
முடிக்குள் நாளொரு பொடிமைகளா?

நாணங் கொள்வது
நன்னெறி செல்வது
வானம் சேர்த்திடும் வாலறிவு!
ஊனம் பாரதி
உரைத்தா னென்பது
ஞானம் பெறாரின் நூலறிவு!

கசடறக் கற்று
கனியென முற்று
காலம் கண்முன் பொன்னாகும்!
இசைபட வாழ
இன்னலஞ் சூழ
எண்ணும் எழுத்தும் கண்ணாகும்!

பெற்றோர் சொல்லை
தட்டுதல் முள்ளில்
பட்டது போன்ற துயர்நேரும்!
குற்ற மிழைக்கும்
குண்டரின் குழுவைப்
பற்றுதல் தீராப் பழிசேரும்!

ஆயிரம் மணிகள்
ஆகில மிருந்தும்
வாயுரை மணிகள் மாணவரே!
பாயிரம் பெற்றோர்
பயிற்றிடும் ஆசான்
பயன்மொழி நடந்தால் தேனவரே!

பாத்தென்றல்.முருகடியான்

கருத்துகள் இல்லை: