புதன், 21 ஜனவரி, 2009

மரங்களும் மாந்தரும்!

ஓரறி வுயிரும் ஆறறி வுயிரும்
ஒன்றெனப் பேசும் ஏழறிவர்
தேரறி வின்றித் திரைதரும் புகழால்
தேவன் திருக்குறள் தீதென்பார்!

மரம்தரும் பயனிலும் மாந்தன் தருவான்
மாந்தன் தருவதை மரம்தருமா?
நிரந்தர நிலைப்பு நிலத்துடன் பிணைப்பு
நிழல்பழம் தருவது மரத்தியல்பு!

கொல்வினை செய்யும் கொடுங்குணம் மாறி
நல்வினை செய்வார் மாந்தரினம்!
முள்ளுடல் மரங்கள் முட்களை நீக்கி
முறையுடல் பெறுமா மரங்களினம்?

ஆல மரம்போல் விழுதுகள் விடஓர்
அரச மரத்தால் முடியாது
காலங் காலமாய்க் கசந்திடும் வெம்பதன்
கனிச்சுவை மாற்றிடும் அறிவேது?

கதவும் கட்டிலும் காய்ந்தால் தரும்மரம்
உதவும் மாந்தரின் உணர்வுறுமா?
பதறும் பசிவரப் பரிந்தொரு பழந்தரப்
பணிதல் குணமந்த மரம்பெறுமா?

தங்கால் நிழலில் தங்கிய மாந்தரின்
தலைவிழுங் காயைத் தடுத்திடுமா?
வெங்கனல் தாங்கும் கிளையுடன் இலைகள்
விரிகுடை போல்நிழல் கொடுத்திடுமா?

தறித்தால் பறித்தால் தரும்பய னன்றித்
தானே கொடுத்திடும் மரமுளதா?
கொறித்தால் எரித்தால் கொதித்தெழு மியல்பு
கொடுத்தால் பெறத்தகுந் திறமுளதா?

பாட்டியின் பசியை ஓட்டிட உலுக்க
பழநி முருகனே வரவேண்டும்
ஈட்டிய நெல்லி இன்கனி யீந்தான்
என்பதில் அறிவைப் பெறவேண்டும்!

ஊக்க மிழந்த மாந்தருக் குவமை
மாக்களைப் போன்ற மரமாகும்
பூக்களைக் கொய்தால் குருதி வராது
பூந்தமிழ்க் குறள்சொல் அறனாகும்!

வீரிய மெடுத்து விதையுண் டாக்கும்
கூரிய அறிவு மாந்தருக்கு
நேரிய தன்றி நிறஞ்சுவை மாற்றும்
நெறிமன மில்லை மரங்களுக்கு!

நயன்மர மென்றும் பயன்மர மென்றும்
நவின்றவன் ஐயன் நாமறிவோம்
அயனவன் படைப்பை அழுக்காக் கிடவா
அருங்குறள் படைப்பான் வாலறிவன்

பகுத்தறி வில்லாப் பயிர்களும் விலங்கும்
பயன்பட வந்தன மாந்தருக்கு
நகுத்துரைப் பாவால் நக்க லடிப்பார்
நாக்கிலும் வாக்கிலும் நரகழுக்கு!

அரம்போல் கூரறி வுடையா ராயினும்
மரம்போ லாகிறார் பண்பிழந்து
புறம்போய்ப் பழித்துரை புகல்வார் இகழ்வார்
பொய்நகை புரிவார் அன்பிழந்து!

அஃறினைப் பொருளை உயர்தினைக் குவமை
ஆக்குதல் வழக்கு மரபாகும்
எஃகதன் கூர்மை பொருள்தரு மென்றே
இசைப்பதும் ஐயன் குறளாகும்!

கொடியிடை எனநாம் குறிப்பதற் காகத்
தடியெடுத் தோரைப் பார்த்தோமா?
வடிவுடை முகத்தை வான்நில வென்றால்
வம்பிழுத் தெவரும் ஆர்த்தோமா?

பாத்தென்றல்.முருகடியான்

கருத்துகள் இல்லை: