செவ்வாய், 16 டிசம்பர், 2008

இறையருளோ?

நாயர் பிடித்த புலிவால்போல்
நானும் பிடித்தேன் கவிவாலை!
காயும் கனியும் பறித்துண்டு
களிப்பில் கசப்பில் கலக்குண்டு
தேயும் வயதும் தெரியாமல்
திரையும் நரையும் புரியாமல்
ஓயும் உடலென் றுணராமல்
உழைக்கச் செய்வதும் இறையருளோ?

மரபுச் சிலுவை சுமந்தாலும்
மரண மனக்கவல் தொடவில்லை!
சிறகை உறவுகள் அறுத்தாலும்
செந்தமிழ்த் தாய்க்கை விடவில்லை!
பரவிச் சென்றன உணர்வலைகள்
பழியில் புகழில் சிலநிலைகள்!
திரவஞ் சிலநாள் திடஞ்சிலநாள்
திரிந்திட வைப்பதும் இறையருளோ?

எண்ணத் தறியில் நூலிழையில்
எத்தனை உடைகள் நெய்தாலும்
வண்ணப் பணமெனும் நிறப்பூச்சு
வாய்த்தால் வளர்வது புகழ்ப்பேச்சு
இன்னல் இழப்பும் எத்தனையோ,
இறைவன் தந்ததென் றெண்ணாமல்
என்னால் வந்ததே எனநினைக்கும்
இயல்பைக் கொடுத்ததும் இறையருளோ?

பாத்தென்றல்.முருகடியான்

1 கருத்து:

அண்ணாமலை..!! சொன்னது…

தங்கள் தமிழுக்குத் தலைவணங்கும் அடியார்கள்
கூட்டத்தில் நானுமொருவன்..!!