புதன், 30 ஜூலை, 2008

உழவின்றி உய்யா துலகு!

வணிகப் பெருக்கம் வலிமை மிகுந்த
அணுவின் துணையாலு மாகும் -கணைகள்
எழுகின்ற காலம் இதுவென்ற போதும்
உழவின்றி உய்யா துலகு!

குண்டுகளால் மக்கள் குருதிக் குளம்நீந்தும்
மண்டுகளால் வையம் மகிழ்ந்திடுமா? -என்றும்
மழையின்றிப் புல்லும் மலரா ததைப்போல்
உழவின்றி உய்யா துலகு!

பாம்பைப் பிடித்துப் படராலங் கொம்பேறித்
தேம்பித்தன் வால்பார்த்துத் தேர்வின்றிக் -கூம்பி
விழும்வாலி போன்று விளையும் அறிவியலும்
உழவின்றி உய்யா துலகு!

பனித்தேர் செதுக்கிப் பகல்முன் இழுப்பார்
அணித்தேர்த் தமிழை அழிப்பார் -கணித்த
முழவின்றி ஓசை முறையின்றிப் பாட்டுய்யா
துழவின்றி உய்யா துலகு!

படைக்கலன் செய்வார் பனிநிலாச் செய்வார்
உடைகலன் கப்பலுடன் ஊர்தி -படைப்பார்
பழுதின்றி எந்தப் பணிசெய்த யார்க்கும்
உழவின்றி உய்யா துலகு!

உலகப் பெருந்தேர் உருள உதவி
விலக்க முடியாத வேராய் -கலகக்
குழுவும் உணவுண்ணக் கைகாட்டும் அச்சாம்
உழவின்றி உய்யா துலகு!

பாத்தென்றல் முருகடியான்.

கருத்துகள் இல்லை: